தென்னிந்திய புத்தக விற்பனையாளர்கள் மற்றும் பதிப்பாளர்கள் சங்கம் (பபாசி) சார்பில் நடத்தப்படும் இந்த அறிவுத் திருவிழா, இன்று தொடங்கி வரும் ஜனவரி 21-ஆம் தேதி வரை மொத்தம் 14 நாட்கள் நடைபெறவுள்ளது. விழாவில் உரையாற்றிய முதலமைச்சர், "13 அரங்குகள் எனத் தொடங்கி இன்று 1000 அரங்குகள் வரை வளர்ந்து நிற்கும் இந்தப் புத்தகக் காட்சி, தமிழகத்தின் அறிவுப் புரட்சிக்குச் சான்றாகும். நமது தமிழ் சமூகம் அறிவில் சிறந்த சமூகமாக உலக அரங்கில் அறியப்பட வேண்டும் என்பதே எமது எண்ணம்" எனப் பெருமிதத்துடன் குறிப்பிட்டார்.
விழாவின் முக்கிய நிகழ்வாக, 2026-ஆம் ஆண்டிற்கான 'முத்தமிழறிஞர் கலைஞர் மு.கருணாநிதி பொற்கிழி விருதுகளை' ஆறு ஆளுமைகளுக்கு முதலமைச்சர் வழங்கினார். கவிதைக்காக கவிஞர் சுகுமாரன், சிறுகதைக்காக ஆதவன் தீட்சண்யா, நாவலுக்காக இரா. முருகன், உரைநடைக்காகப் பேராசிரியர் பாரதிபுத்திரன், நாடகத்திற்காகக் கருணா பிரசாத் மற்றும் மொழிபெயர்ப்புக்காக வ. கீதா ஆகியோருக்கு இந்த உயரிய விருதுகள் வழங்கப்பட்டன. தொடர்ந்து மைதானத்தில் அமைக்கப்பட்டுள்ள தற்காலிகத் திருவள்ளுவர் சிலையைத் திறந்து வைத்த முதல்வர், பல்வேறு அரங்குகளை நேரில் பார்வையிட்டு நூல்களைக் கொள்முதல் செய்தார். துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மற்றும் அமைச்சர்கள் மா.சுப்பிரமணியன், அன்பில் மகேஸ் பொய்யாமொழி ஆகியோர் உடனிருந்தனர்.
இந்த ஆண்டு புத்தகக் காட்சியின் சிறப்பம்சமாக, பொதுமக்கள் அனைவரும் எவ்வித நுழைவுக் கட்டணமும் இன்றி இலவசமாக அனுமதிக்கப்படுகின்றனர். "அதிகப்படியான மக்கள் புத்தகங்களோடு உறவாட வேண்டும் என்பதற்காக நுழைவுக் கட்டணம் ரத்து செய்யப்பட்டதை வரவேற்கிறேன்" என்று முதல்வர் தெரிவித்தார். மேலும், தனக்கு அன்பளிப்பாக வழங்கப்பட்ட 4 லட்சம் புத்தகங்களை மாணவர்கள் மற்றும் இலங்கை உள்ளிட்ட வெளிநாடுகளில் உள்ள படிப்பு வட்டங்களுக்கு அனுப்பி வைத்துள்ளதாகக் குறிப்பிட்ட அவர், மதுரையில் உள்ள கலைஞர் நூலகத்தை இதுவரை 24.72 லட்சம் பேர் பார்வையிட்டுள்ளதையும் பெருமையுடன் சுட்டிக்காட்டினார்.
இதையும் படிங்க: "ஆக்கிரமிப்பா? உடனே ஆபீசருக்கு போன் பண்ணுங்க!" ஹைகோர்ட் சொன்ன செம ஐடியா!
தினமும் காலை 11 மணி முதல் இரவு 8:30 மணி வரை செயல்படும் இந்தப் புத்தகக் காட்சியில், அனைத்து நூல்களுக்கும் 10 சதவீதத் தள்ளுபடி வழங்கப்படுகிறது. சைதாப்பேட்டையிலிருந்து நந்தனம் வர இலவச மினி பேருந்துகள், குடிநீர், கழிப்பறை மற்றும் சிசிடிவி கண்காணிப்பு என விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. பள்ளி மாணவர்களுக்காக ஓவியம், சிலம்பம் மற்றும் பொங்கல் போட்டிகளும் நடத்தப்பட உள்ளன. "உங்கள் நேரத்தைப் புத்தகங்களுக்காகச் செலவிடுங்கள்; குழந்தைகளை அழைத்து வந்து இந்த அறிவுச் சங்கமத்தில் பங்கேற்கச் செய்யுங்கள்" எனச் சென்னை வாசகர்களுக்கு முதல்வர் அன்பான வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இதையும் படிங்க: "நாளை காலை 8 மணி.. மிஸ் பண்ணிடாதீங்க!" பொங்கல் ஸ்பெஷல் ரயில்களுக்கான முன்பதிவு தொடக்கம்!