கேரளாவின் புகழ்பெற்ற சபரிமலை அய்யப்பன் கோவிலில் மகர விளக்கு பூஜைக் காலம் கடந்த டிசம்பர் 30ஆம் தேதி மாலை தொடங்கியது. டிசம்பர் 31ஆம் தேதி முதல் நெய்யபிஷேகம் தொடங்கியதில் இருந்து தினமும் லட்சக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனத்துக்கு வருகை தந்து வருகின்றனர். இதனால் கோவிலைச் சுற்றியுள்ள பகுதிகளில் பக்தர்கள் கூட்டம் அலைமோதுகிறது.
நேற்று காலை பம்பை பகுதியில் பக்தர்கள் எண்ணிக்கை திடீரென அதிகரித்ததால், மலை ஏறுவதற்கு தற்காலிக கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. பம்பை மணல் பரப்பில் பக்தர்களை தடுத்து நிறுத்தி, படிப்படியாக மலையேற அனுமதி வழங்கப்பட்டது.
நீலிமலை, அப்பாச்சி மேடு, மரக்கூட்டம் வழியாக சன்னிதானம் செல்லும் பாதையில் சரங்குத்தி பகுதியில் உள்ள 'கியூ காம்ப்ளக்ஸ்' கட்டடங்களில் பக்தர்களை தங்க வைத்து, பின்னர் சன்னிதானத்துக்கு அனுப்பி வைத்தனர்.
இதையும் படிங்க: 2026 தேர்தல்... பாமக சார்பில் போட்டியிடனுமா? விருப்ப மனுக்கள் பெற ராமதாஸ் முடிவு... முக்கிய அறிவிப்பு...!
இதனால் பம்பையில் இருந்து சன்னிதானம் சென்றடைவதற்கு 8 முதல் 10 மணி நேரம் வரை ஆகிறது. 18 படிகளில் ஏறுவதற்கு மட்டும் சராசரியாக 10 மணி நேரம் வரை பக்தர்கள் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

ஒரு நிமிடத்துக்கு 4,000 முதல் 4,200 பக்தர்கள் வரை 18 படிகளில் ஏற்றப்படுவதாக போலீசார் தெரிவித்தனர். இருப்பினும், தொடர்ந்து வரும் பக்தர்கள் கூட்டம் காரணமாக நீண்ட காத்திருப்பு தவிர்க்க முடியவில்லை என்று பக்தர்கள் கூறுகின்றனர்.
மகர விளக்கு பூஜை ஜனவரி 14ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில், அன்று இன்னும் அதிகமான பக்தர்கள் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இதை முன்னிட்டு போலீசார் மற்றும் கோவில் நிர்வாகம் பல்வேறு ஏற்பாடுகளை செய்து வருகின்றனர். விர்ச்சுவல் கியூ முறையில் முன்பதிவு செய்து வரும் பக்தர்களுக்கு மட்டுமே தரிசன அனுமதி வழங்கப்படுகிறது. பக்தர்கள் காத்திருப்பு நேரத்தை குறைக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
இருப்பினும், பக்தர்கள் கூட்டம் தொடர்ந்து அதிகரித்து வருவதால், அய்யப்ப பக்தர்கள் பொறுமையுடன் காத்திருந்து சாமி தரிசனம் செய்ய வேண்டிய நிலை உள்ளது.
இதையும் படிங்க: ஆடு, கோழிக்கு எல்லாம் உயிர் இல்லையா? தெருநாய்கள் ஆதரவாளர்களுக்கு உச்சநீதிமன்றம் கேள்வி!