கேரளாவின் புகழ்பெற்ற சபரிமலை அய்யப்பன் கோவிலில் 2019ஆம் ஆண்டு நடந்த புனரமைப்பு பணிகளின் போது தங்க கவசங்களில் இருந்து தங்கம் திருடப்பட்டது தொடர்பான வழக்கில் பெரும் திருப்பம் ஏற்பட்டுள்ளது. கேரள உயர்நீதிமன்ற உத்தரவுப்படி அமைக்கப்பட்ட சிறப்பு புலனாய்வுக் குழு (SIT) தாக்கல் செய்த அறிக்கையில், இது திட்டமிட்ட சதி என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
2019இல் கோவிலின் கருவறை கதவுகள் மற்றும் துவாரக பாலகர் சிலைகளில் பதிக்கப்பட்டிருந்த தங்க கவசங்களை புதுப்பிக்கும் பணி நடந்தது. அப்போது தங்க கவசங்களில் இருந்து கணிசமான அளவு தங்கம் காணாமல் போனது தெரியவந்தது. இதுதொடர்பாக திருவிதாங்கூர் தேவசம் போர்டு புகார் அளித்தது. உயர்நீதிமன்ற உத்தரவின்படி SIT விசாரணை நடத்தியது.
விசாரணையில் தேவசம் போர்டு முன்னாள் தலைவர் உட்பட 9 பேர் கைது செய்யப்பட்டனர். தற்போது SIT தாக்கல் செய்த அறிக்கையில், தங்க முலாம் பூசும் பணியை மேற்கொண்ட சென்னையைச் சேர்ந்த ஸ்மார்ட் கிரியேஷன்ஸ் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி பங்கஜ் பண்டாரி 409 கிராம் தங்கத்தை திருடியது உறுதியானது. அவர் அந்த தங்கத்தை பெல்லாரியைச் சேர்ந்த தங்க வியாபாரி கோவர்தனுக்கு வழங்கியுள்ளார்.
இதையும் படிங்க: சபரிமலை தங்கம் மாயமான விவகாரம்! 6 வாரம்தான் டைம்! எஸ்ஐடிக்கு கேரளா ஐகோர்ட் அவகாசம்!

புனரமைப்பு பணிக்கான செலவுகளை ஏற்றுக்கொண்ட பெங்களூரு தொழிலதிபர் உண்ணிகிருஷ்ணன் போத்திக்கும் இந்தத் திருட்டில் தொடர்பு உள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது. கருவறை மற்றும் ஏழு பகுதி கதவு சட்டகங்கள், துவாரக பாலகர் சிலைகளின் கவசங்களில் இருந்து மேலும் தங்கத்தை திருடுவதற்காக இவர்கள் மூவரும் சதித் திட்டம் தீட்டியுள்ளனர்.
நீதிமன்ற விசாரணையின் போது, இவர்கள் மூவரும் பெங்களூருவில் ரகசியமாக சந்தித்து பேசியது செல்போன் டவர் தரவுகள் மூலம் உறுதிப்படுத்தப்பட்டது. விசாரணையில் தங்களுக்குள் உள்ள தொடர்பு கண்டுபிடிக்கப்பட்டால் என்ன செய்வது என்பது குறித்தும், ஆதாரங்களை அழிப்பது குறித்தும் அவர்கள் விவாதித்துள்ளதாக SIT அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த வழக்கு சபரிமலை கோவிலின் புனிதத்தன்மை மற்றும் நிர்வாகத்தில் வெளிப்படைத்தன்மை குறித்து பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. விசாரணை தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில், குற்றம்சாட்டப்பட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க: தங்கம் திருடியவர்கள் யாரப்பா..? ‘தோழர்கள்’ தானே ஐயப்பா!! கேரளாவில் காங்கிரசை ஜெயிக்க வைத்த பலே பாடல்