ஜோகன்னஸ்பர்க், ஜனவரி 6: தென்னாப்ரிக்காவின் ஜோகன்னஸ்பர்க் நகரில் உள்ள பி.ஏ.பி.எஸ். (போச்சசன்வாசி ஸ்ரீ அக்ஷர் புருஷோத்தம் சுவாமி நாராயண் சன்ஸ்தா) ஹிந்து கோயில் மற்றும் கலாசார வளாகத்தின் நுழைவாயிலில், 18ஆம் நூற்றாண்டின் புகழ்பெற்ற யோகியும் ஆன்மிகத் தலைவருமான நீல்கண்ட் வர்ணியின் 42 அடி உயர வெண்கல சிலை நிறுவப்பட்டுள்ளது.
இது தென்னாப்ரிக்காவிலேயே மிக உயரமான வெண்கல சிலையாகும். ஆப்ரிக்க கண்டத்தில் நைஜீரியாவின் மொரேமி சிலைக்கு அடுத்தபடியாக நான்காவது உயரமான சிலையாக இது இடம்பிடித்துள்ளது.
மொத்தம் 20 டன் எடை கொண்ட இச்சிலை, விருக்ஷாசனம் எனப்படும் ஒற்றைக் காலில் நின்று தவம் செய்யும் யோக நிலையில் செதுக்கப்பட்டுள்ளது. இது ஒரு சிறந்த பொறியியல் சாதனையாகக் கருதப்படுகிறது. சிலையின் திறப்பு விழா நேற்று முன்தினம் நடைபெற்றது.
இதையும் படிங்க: ஆவின் பால் விலை மறைமுக உயர்வு..!! சத்தமில்லாமல் கிரீன் மேஜிக்+ விற்பனை..?? மக்கள் கொந்தளிப்பு..!!
விழாவுக்கு பி.ஏ.பி.எஸ். அமைப்பின் மூத்த துறவி சுவாமி பிரகாஷ் தாஸ் தலைமை தாங்கினார். தென்னாப்ரிக்காவின் நிதித்துறை இணை அமைச்சர் அஷோர் சருபன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

நீல்கண்ட் வர்ணி யார்?
பகவான் சுவாமி நாராயணின் இளமைக்காலப் பெயரே நீல்கண்ட் வர்ணி. இவர் 1781ஆம் ஆண்டு உத்தரப் பிரதேசத்தின் சப்பையா கிராமத்தில் கன்ஷியாம் பாண்டே என்ற பெயரில் பிறந்தார். 11 வயதில் ஆன்மிகத் தேடலுக்காக வீட்டைவிட்டு வெளியேறினார். அப்போதுதான் நீல்கண்ட் வர்ணி என்று அழைக்கப்பட்டார்.
அடுத்த ஏழு ஆண்டுகளில் (1792-1799) இந்தியா முழுவதும் 12,000 கிலோமீட்டர் தொலைவை வெறும் கால்களால் நடந்து பயணம் செய்தார். இமயமலையின் கடும் குளிர் பகுதிகளில் குறைந்த ஆடைகளுடன் கடுமையான யோகப் பயிற்சிகளை மேற்கொண்டார். ஒற்றைக் காலில் நின்று தவம் செய்தது போன்ற நிலையில் இச்சிலை உருவாக்கப்பட்டுள்ளது. பயணத்தை குஜராத்தில் முடித்த அவர், அங்கு சுவாமி நாராயண் என்று போற்றப்பட்டார்.
சமூக சீர்திருத்தங்களில் முக்கிய பங்காற்றிய நீல்கண்ட் வர்ணி, உடன்கட்டை ஏறும் 'சதி' வழக்கத்துக்கு எதிராகப் போராடினார். பெண் சிசுக் கொலையைத் தடுக்க முயன்றார். ஏழைகளுக்கு உணவு வழங்கினார். சாதி பாகுபாடுகளை நீக்க பாடுபட்டார். இவரது வாழ்க்கை பலருக்கு உத்வேகமாக விளங்குகிறது.
ஜோகன்னஸ்பர்க்கில் உள்ள பி.ஏ.பி.எஸ். கோயில் வளாகம் இந்து கலாசாரத்தை பரப்பும் முக்கிய மையமாக உள்ளது. இச்சிலை நிறுவல் இந்து ஆன்மிகத்தை உலகளாவிய அளவில் பறைசாற்றும் நிகழ்வாகப் பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க: இரட்டை இலை சின்னம் யாருக்கு? தேர்தலுக்கு முன்பே சொல்லிடுங்க! விசாரணையை முடிக்க கோரி வழக்கு!