கடலூரில் இன்று நடைபெற்ற பாட்டாளி மக்கள் கட்சியின் பொதுக்கூட்டத்தில் பங்கேற்றுப் பேசிய அன்புமணி ராமதாஸ், திமுக அரசை மிகக் கடுமையாக விமரிசித்துப் பேசினார். “மிக மோசமான திமுக ஆட்சியை அகற்ற மெகா கூட்டணி உருவாகியுள்ளது; இன்னும் மூன்றே மாதங்களில் இந்த ஆட்சி அகற்றப்படும்” என அவர் ஆவேசமாகத் தெரிவித்தார். குறிப்பாக, தமிழகத்தில் பெண்கள் மற்றும் முதியவர்களுக்குப் பாதுகாப்பு இல்லை என்றும், 8 வயது சிறுமி முதல் 80 வயது முதியவர் வரை அச்சத்துடனேயே வாழ வேண்டிய நிலை உள்ளதாகவும் அவர் குற்றம் சாட்டினார்.
கடலூர் மாவட்டத்தின் நிலவரம் குறித்துப் பேசிய அன்புமணி ராமதாஸ், "கடலூருக்குச் சிப்காட் வரமல்ல, அது ஒரு சாபக்கேடு; தாய்ப்பாலில் டயாக்ஸின் நச்சு கண்டுபிடிக்கப்பட்ட பகுதி இது" என வேதனையுடன் குறிப்பிட்டார். என்.எல்.சி (NLC) நிறுவனத்திற்கு எதிராகத் தனது கண்டனத்தைப் பதிவு செய்த அவர், "சோறு போடும் மண்ணைத் தோண்டி, குடிநீரை எடுத்து வீணாகக் கடலுக்கு அனுப்பும் என்.எல்.சி எங்களுக்கு வேண்டாம்; மண்ணையும் மக்களையும் அழிக்கும் இந்த நிறுவனம் வெளியேற வேண்டும்" என்றார். வேளாண் துறை அமைச்சரே ஏழை மக்களின் நிலத்தைப் பிடுங்கி என்.எல்.சி-யிடம் ஒப்படைப்பதாகவும், இது இன்னும் இரண்டு மாதங்கள் மட்டுமே நீடிக்கும் என்றும் அவர் எச்சரித்தார்.
திமுகவின் தேர்தல் வாக்குறுதிகள் குறித்துப் பேசிய அவர், "அளிக்கப்பட்ட 505 வாக்குறுதிகளில் வெறும் 66 மட்டுமே நிறைவேற்றப்பட்டுள்ளன; 13 சதவீத மதிப்பெண் எடுத்துத் தோல்வியுற்ற (FAIL) இந்த ஆட்சி மீண்டும் வர வேண்டுமா?" எனக் கேள்வி எழுப்பினார். மேலும், "ஸ்டாலின் செய்த மிகப்பெரிய துரோகம் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தாததுதான்; நாங்கள் ஆட்சிக்கு வந்த முதல் நாளிலேயே சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்" என உறுதி அளித்தார். பழைய ஓய்வூதியத் திட்ட விவகாரத்தில் அரசு ஊழியர்களை ஏமாற்றும் வகையில் பெயரளவு அறிவிப்புகள் வெளியாவதாகவும், அதனை நம்ப வேண்டாம் என்றும் அவர் கேட்டுக்கொண்டார். "சாகும் நேரத்தில் சங்கரா சங்கரா என்பது போல, இப்போது லேப்டாப் வழங்குகிறார்கள்; எதற்கு இப்படி வாழ்க்கையில் நடிக்கிறீர்கள், பேசாமல் சினிமாவுக்கே சென்றுவிடுங்கள்" என முதலமைச்சர் ஸ்டாலினை விமர்சித்தார்.
இதையும் படிங்க: சூடு பிடிக்கும் அரசியல் களம்: ஒன்றிணையுமா அதிமுக? அமித்ஷாவுடன் இன்று எடப்பாடி பழனிசாமி முக்கிய ஆலோசனை!
இதையும் படிங்க: “பாஜக-அதிமுக கூட்டணி 2026-ல் ஆட்சியைப் பிடிக்கும்!” - 'தமிழகம் தலைநிமிர தமிழனின் பயணம்' நிறைவு விழாவில் அமித்ஷா சூளுரை!