அதிமுக டெல்லியில் முகாமிட்டாலும் சரி, பாஜகவின் ஒட்டுமொத்த மத்திய அமைச்சர்களும் தமிழகத்தில் முகாமிட்டாலும் சரி, அவர்களுக்குத் தமிழக மக்கள் தோல்வியையே பரிசளிப்பார்கள் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் (CPI) மாநிலச் செயலாளர் வீரபாண்டியன் தெரிவித்துள்ளார்.
திருவாரூர் வர்த்தக சங்க மண்டபத்தில் இன்று நடைபெற்ற இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் சிறப்புக் கூட்டத்தில் பங்கேற்ற வீரபாண்டியன், பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் பேசுகையில், "பாஜக தனித்து வந்தாலும் சரி, கூட்டணியாக வந்தாலும் சரி, அவர்களின் பருப்பு தமிழகத்தில் வேகாது. திமுக தலைமையிலான எங்களது கூட்டணி கொள்கை வழி கூட்டணி; இது யாரைக் கண்டும் அஞ்சாது" எனத் திட்டவட்டமாகத் தெரிவித்தார்.
மத்திய அமைச்சர் பியூஸ் கோயல் திமுக கூட்டணியை 'இந்து விரோத கூட்டணி' என விமர்சித்ததற்கு வீரபாண்டியன் கடும் கண்டனம் தெரிவித்தார். "அமைச்சர் பியூஸ் கோயலின் பேச்சு மிகவும் ஆபத்தானது மற்றும் சட்டத்திற்குப் புறம்பானது; இந்தியாவிலேயே அதிகக் கோயில்களைக் கொண்ட பூமி தமிழ்நாடு, இங்கு மத நல்லிணக்கத்தைத் தகர்க்க முயற்சிப்பதை மக்கள் நிராகரிக்க வேண்டும்" என்றார். மேலும், அமித்ஷா தமிழகத்தில் வழிபாட்டு உரிமைக்கு இடர் இருப்பதாகக் கூறுவது அவர் சொல்லும் 1000 பொய்களில் ஒன்று என்றும், தமிழகத்தில் அனைத்து மதத்தினருக்கும் சட்டபூர்வமான வழிபாட்டு உரிமை நிலைநாட்டப்பட்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
இதையும் படிங்க: "அதிமுக-பாமக கூட்டணியால் திமுகவுக்கு ஜன்னி வரும்!" அன்புமணி ராமதாஸ் ஆவேசம்!
சமீபத்தில் தமிழக அரசு மருத்துவமனை மருத்துவர்கள் 1,000-க்கும் மேற்பட்ட மாற்று அறுப்புப் பொருத்த அறுவை சிகிச்சைகளைச் செய்து சாதனை படைத்திருப்பதைச் சுட்டிக்காட்டிய வீரபாண்டியன், தனியார் மருத்துவமனைகளே செய்யாத இந்த மகத்தான சாதனையைப் பாராட்டி மருத்துவர்களுக்கு வாழ்த்துத் தெரிவித்தார். விஜய் மற்றும் காங்கிரஸ் நிர்வாகி பிரவீன் சக்கரவர்த்தி சந்திப்பு குறித்த கேள்விக்கு பதிலளித்த அவர், "யார் யாருடன் கைகோர்த்து வந்தாலும், திமுக கூட்டணிக்கு மக்கள் மற்றும் நலத்திட்டங்களின் ஆதரவு இருப்பதால் வெற்றி நிச்சயம்; எங்களது கூட்டணி மதவாத சக்திகளை முறியடித்து நாடாளுமன்ற ஜனநாயகத்தைக் காப்பாற்றும்" என உறுதிபடத் தெரிவித்தார். இக்கூட்டத்தில் நாகை எம்பி செல்வராஜ், திருத்துறைப்பூண்டி எம்எல்ஏ மாரிமுத்து உள்ளிட்ட நிர்வாகிகள் திரளாகப் பங்கேற்றனர்.
இதையும் படிங்க: சூடு பிடிக்கும் அரசியல் களம்: ஒன்றிணையுமா அதிமுக? அமித்ஷாவுடன் இன்று எடப்பாடி பழனிசாமி முக்கிய ஆலோசனை!