தமிழகத்தில் அரசியல் கட்சிகள் ஓட்டுச்சாவடி முகவர்களை நியமித்த விவரத்தை இந்திய தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. இதன்படி, அதிக முகவர்களை நியமித்து திமுக முதலிடத்தைப் பிடித்துள்ளது. அதிமுக இரண்டாவது இடத்திலும், பாஜக மூன்றாவது இடத்திலும் உள்ளன.
தமிழகத்தில் ஒரு மாதத்துக்கு முன்பு 68,470 ஓட்டுச்சாவடிகள் இருந்தன. தற்போது ஒரு ஓட்டுச்சாவடிக்கு 1,200 வாக்காளர்கள் என்ற அடிப்படையில் புதிய சாவடிகள் அமைக்கப்பட உள்ளன. இதனால் ஓட்டுச்சாவடிகளின் எண்ணிக்கை அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அனைத்து ஓட்டுச்சாவடிகளுக்கும் முகவர்களை நியமிக்குமாறு தேர்தல் ஆணையம் அரசியல் கட்சிகளுக்கு உத்தரவிட்டது. பெரும்பாலான கட்சிகள் அனைத்து சாவடிகளுக்கும் முகவர்கள் நியமித்துள்ளதாகக் கூறினாலும், உண்மையில் பல கட்சிகள் குறைவாகவே நியமித்துள்ளது தேர்தல் ஆணைய விவரத்தில் தெரியவந்துள்ளது.
இதையும் படிங்க: எதுக்கெடுத்தாலும் இப்படியா? தவெக தலைவர் விஜய் மீது அதிருப்தியில் தொண்டர்கள்?!
தேர்தல் ஆணையம் வெளியிட்ட பட்டியலின்படி, திமுக 65,210 ஓட்டுச்சாவடிகளுக்கு முகவர்களை நியமித்து முதலிடத்தில் உள்ளது. அதிமுக 63,707 சாவடிகளுக்கு முகவர்களை நியமித்து இரண்டாவது இடத்திலும், பாஜக 54,258 சாவடிகளுக்கு முகவர்களை நியமித்து மூன்றாவது இடத்திலும் உள்ளது. தேமுதிக 31,849, தமிழக காங்கிரஸ் 27,158 சாவடிகளுக்கு முகவர்களை நியமித்துள்ளன.

நாம் தமிழர் கட்சி 1,749, விடுதலை சிறுத்தைகள் கட்சி 146, பகுஜன் சமாஜ் கட்சி 86, ஆம் ஆத்மி கட்சி 52 ஓட்டுச்சாவடிகளுக்கு மட்டுமே முகவர்களை நியமித்துள்ளன.
ஆளும் கட்சியான திமுக அதிக முகவர்களை நியமித்துள்ளது ஆச்சரியம் அளிக்கவில்லை என்றாலும், எதிர்க்கட்சியான அதிமுகவும் கிட்டத்தட்ட அதே அளவில் முகவர்களை நியமித்துள்ளது குறிப்பிடத்தக்கது. பாஜகவும் கணிசமான எண்ணிக்கையில் முகவர்களை நியமித்துள்ளது. சிறிய கட்சிகள் குறைவான சாவடிகளுக்கு மட்டுமே முகவர்களை நியமித்துள்ளன.
தேர்தல் நெருங்கும் நேரத்தில் ஓட்டுச்சாவடி முகவர்கள் மிக முக்கியமானவர்கள். வாக்குப்பதிவு நாளில் அவர்கள்தான் கட்சியின் கண்களாகச் செயல்படுவர். இந்தப் பட்டியல் கட்சிகளின் தயார்நிலையைப் பிரதிபலிப்பதாக அரசியல் பார்வையாளர்கள் கருதுகின்றனர்.
இதையும் படிங்க: கமல் கேள்விக்கு கட்காரி பதில்! ராஜ்யசபாவில் சுவாரஸ்யம்! எத்தனால் கலப்பு பெட்ரோலால் பாதிப்பு?