புதுக்கோட்டையில் இன்று நடைபெற்ற 'தமிழகம் தலைநிமிர தமிழனின் பயணம்' பேரணியின் பிரம்மாண்ட நிறைவு விழாவில் அமித்ஷா பங்கேற்று உரையாற்றினார். அப்போது, "எப்பாடுபட்டாவது திமுக கூட்டணி ஆட்சியை ஒழித்தே தீருவோம்" என்று அவர் அதிரடியாக முழங்கினார். பாஜக, அதிமுக மற்றும் இதர தோழமைக் கட்சிகள் இணைந்து வலுவான கூட்டணி அமைத்துத் தமிழ்நாட்டில் ஆட்சி அமைக்கப் போவதாக அவர் உறுதி அளித்தார். மேலும், பிரதமர் மோடியின் தலைமையின் கீழ் பாரதத்தின் வளர்ச்சிப் பாதையில் தமிழகமும் இணைய வேண்டும் என்று அவர் மக்களிடம் அறைகூவல் விடுத்தார்.
மாபெரும் சோழ சாம்ராஜ்யத்தின் பூமியான புதுக்கோட்டையில், பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் ஏற்பாடு செய்திருந்த எழுச்சிப் பேரணியின் நிறைவு விழாவில் அமித்ஷா உரையாற்றினார். தனது உரையைத் தொடங்கும் முன், தொன்மையான தமிழ் மொழியில் பேச முடியாததற்கு மன்னிப்புக் கோரிய அவர், ஆழ்வார்கள், நாயன்மார்கள் மற்றும் சித்து புருஷர்களைத் தலைவணங்கி தனது மரியாதையைச் செலுத்தினார். “சத்தம் கேட்கவில்லை இன்னும் சத்தமாக முழங்குங்கள்; மோடியின் தலைமையின் கீழ் தமிழ்நாட்டில் ஆட்சி அமைய வேண்டுமா இல்லையா?” என அவர் கேட்டபோது, கூடியிருந்த ஆயிரக்கணக்கான தொண்டர்கள் கரவொலி எழுப்பி உற்சாகத்தைப் பதிவு செய்தனர்.
திமுக அரசு மீது கடுமையான ஊழல் புகார்களைச் சுமத்திய அமித்ஷா, "பாரதத்திலேயே மிகப்பெரிய ஊழல் ஆட்சி என்றால் அது திமுக தான்" என்று சாடினார். மணல் அள்ளுவதில் நிலத்தடி ஊழல் வரை அமைச்சர்களின் பெயர்கள் அடிபடுவதைச் சுட்டிக்காட்டிய அவர், ஒரு குறிப்பிட்ட அமைச்சரின் பெயர் 6,000 கோடி ரூபாய் சிஆர்ஐடிபி (CRIDP) விவகாரத்தில் வெளியாகி உள்ளதாகக் குறிப்பிட்டார். “தமிழக அரசின் ஒரே நோக்கம் உதயநிதி ஸ்டாலினை முதலமைச்சர் ஆக்குவதுதான்; இந்த ஒரு குடும்ப ஆட்சிக்கு மக்கள் முடிவு கட்ட வேண்டிய நேரம் வந்துவிட்டது” என்றும் அவர் ‘பஞ்ச்’ வைத்தார். மேலும், அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் மற்றும் தூய்மைப் பணியாளர்கள் தங்கள் கோரிக்கைகளுக்காகத் தெருவில் இறங்கிப் போராடும் அவல நிலையைச் சுட்டிக்காட்டிய அவர், 1,300 பெண் ஆசிரியர்கள் கைது செய்யப்பட்டதற்குத் தனது கண்டனத்தைப் பதிவு செய்தார்.
இதையும் படிங்க: 20 லட்சம் கல்லூரி மாணவர்களுக்கு லேப்டாப்! நாளை தொடங்கி வைக்கிறார் முதலமைச்சர் ஸ்டாலின்!
பிரதமர் மோடியின் தமிழ்ப்பற்றை விவரித்த அமித்ஷா, ஐஏஎஸ், ஐபிஎஸ் தேர்வுகளில் தமிழை அறிமுகப்படுத்தியது, ரயில் நிலையங்களில் தமிழில் அறிவிப்பு செய்வது மற்றும் வாரணாசி பல்கலைக்கழகத்தில் பாரதி பெயரில் இருக்கை அமைத்தது போன்ற மோடி அரசின் சாதனைகளை வரிசைப்படுத்தினார். “திருக்குறளை 13 மொழிகளில் மொழிபெயர்த்தவர் மோடி; காங்கிரஸ் மற்றும் திமுக அருங்காட்சியகத்தில் வைத்திருந்த செங்கோலை நாடாளுமன்றத்தில் வைத்து அழகு பார்த்தவர் நமது பிரதமர்” என்று அவர் பெருமிதத்துடன் கூறினார். 2024 தேர்தலில் அதிமுக மற்றும் பாஜக வாங்கிய வாக்குகளைப் பார்த்தாலே 26 தொகுதிகளில் வெற்றி பெற்றிருப்போம் என்று குறிப்பிட்ட அவர், வரும் 2026-ல் அதிமுக-பாஜக கூட்டணி வெற்றி பெற்றுத் தமிழ்நாட்டில் புதிய வரலாற்றைப் படைக்கும் எனத் தீர்க்கமாகக் கூறினார்.
இதையும் படிங்க: “ராயப்பேட்டையில் குவியும் அதிமுக நிர்வாகிகள்!” ஜனவரி 9 முதல் நேர்காணல்; வேட்பாளர் தேர்வில் இபிஎஸ் காட்டும் வேகம்!