தமிழக அரசியலில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய தேமுதிகவின் 'மக்கள் உரிமை மீட்பு மாநாடு 2.0' கடலூர் மாவட்டம் வேப்பூர் அருகே இன்று எழுச்சியுடன் நடைபெற்றது. இந்த மாநாட்டில், தமிழகத்தின் வாழ்வாதாரப் பிரச்சினைகள் மற்றும் அரசியல் மாற்றத்தை முன்னிறுத்தி 10 முக்கியத் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் தலைமையில் நடைபெற்ற இந்த மாநாட்டில், 'புரட்சிக் கலைஞர்' கேப்டன் விஜயகாந்திற்கு நாட்டின் உயரிய விருதான 'பாரத ரத்னா' வழங்க வேண்டும் என்பதும், சென்னையில் அவருக்கு அரசு சார்பில் மணிமண்டபம் அமைக்க வேண்டும் என்பதும் பிரதான கோரிக்கைகளாக முன்வைக்கப்பட்டன. மேலும், 2026 சட்டமன்றத் தேர்தலில் தமிழக இளைஞர்களுக்கும், தொழிலாளர்களுக்கும் நம்பிக்கையளிக்கும் புதிய ஆட்சி அமைய வேண்டும் எனத் தொண்டர்கள் மத்தியில் சூளுரைக்கப்பட்டது.
மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களில், தமிழகத்தில் சீர்குலைந்துள்ள சட்டம்-ஒழுங்கைச் சீரமைக்க வேண்டும் என்றும், கள்ளச்சாராயம் மற்றும் கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்களை முழுமையாக ஒழிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டது. குறிப்பாக, பொங்கல் நிவாரணமாக அனைத்துக் குடும்ப அட்டைதாரர்களுக்கும் எவ்விதப் பாகுபாடும் இன்றி ரூ.3,000 ரொக்கப்பணம் வழங்கப்பட வேண்டும் எனத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. தூய்மைப் பணியாளர்கள், செவிலியர்கள் மற்றும் இடைநிலை ஆசிரியர்களின் நீண்டகாலக் கோரிக்கையான பணி நிரந்தரம் மற்றும் ஊதிய நிலுவைகளை உடனடியாக வழங்க வேண்டும் எனவும் அரசுக்குத் தேமுதிக அழுத்தம் கொடுத்துள்ளது.
இதையும் படிங்க: "மக்கள் உரிமை மீட்பு மாநாடு 2.0": தேமுதிக கடலூர் நாட்டிற்கு பிரேமலதா விஜயகாந்த் அழைப்பு!
கடலூர் மாவட்டத்தின் வாழ்வாதாரப் பிரச்சினையான என்.எல்.சி (NLC) விவகாரத்தில், நிலம் கொடுத்தவர்களுக்குப் பணி நிரந்தரம் வழங்க வேண்டும் என்ற நீதிமன்றத் தீர்ப்பை அமல்படுத்தாத நிர்வாகத்தைக் கண்டித்ததோடு, மத்திய அரசின் புதிய தொழிலாளர் சட்டத் தொகுப்புகளை மறுபரிசீலனை செய்ய வேண்டும் எனவும் கோரப்பட்டது. கச்சத்தீவு மீட்பு, நதிகள் இணைப்பு, விவசாயிகளுக்கு நிரந்தரக் கிடங்குகள் மற்றும் கரும்பிற்கு நியாயமான விலை போன்ற விவசாயம் சார்ந்த கோரிக்கைகளும் வலுவாக முன்வைக்கப்பட்டன. இந்த மாநாட்டின் மூலம் 2026 தேர்தல் களத்தில் தேமுதிக தனது அரசியல் ஆளுமையை மீண்டும் நிரூபித்துள்ளதாகக் கட்சி நிர்வாகிகள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.
இதையும் படிங்க: "வானத்தைப் போல மனம் படைத்தவர்" - விஜயகாந்த் நினைவிடத்தில் எடப்பாடியார் புகழஞ்சலி!