கே.என். நேரு தொடர்புடைய இடங்களில் லஞ்ச ஒழிப்புத் துறை அதிகாரிகள் சோதனையை விரிவுபடுத்தியுள்ளனர். வேலை வாங்கித் தருவதாகக் கூறி ரூ.634 கோடி மோசடி செய்ததாக எழுந்த புகார் தொடர்பான வழக்கின் ஒரு பகுதியாக, தமிழகம் முழுவதும் 25 இடங்களில் லஞ்ச ஒழிப்புத் துறையின் சிறப்புப் புலனாய்வுக் குழுவினர் இன்று சோதனை நடத்தி வருகின்றனர்.
சென்னை, திருச்சி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் சோதனை நடைபெற்று வருகிறது. இதன் ஒரு பகுதியாக, நாமக்கல் முன்னாள் திமுக சட்டமன்ற உறுப்பினர் ராமலிங்கத்தின் வீட்டிலும் அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். இன்று காலை 7 மணியளவில் அவரது வீட்டுக்குச் சென்ற அதிகாரிகள், வீடு பூட்டியிருந்ததால் ராமலிங்கத்தைத் தொடர்புகொண்டு வரவழைத்துள்ளனர். அவர் வந்த பிறகு வீட்டைத் திறந்து சோதனையைத் தொடங்கியதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஏற்கனவே நடைபெற்ற விசாரணையில் கிடைத்த ஆவணங்களைச் சரிபார்ப்பதுடன், கூடுதல் ஆதாரங்களையும் தகவல்களையும் சேகரிக்கும் நோக்கில் இந்தச் சோதனைகள் மேற்கொள்ளப்படுவதாக லஞ்ச ஒழிப்புத் துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. சோதனை முடிவடைந்த பிறகு, கைப்பற்றப்பட்ட ஆவணங்கள் மற்றும் விசாரணையின் அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்த விவரங்கள் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
நாமக்கல் மோகனூர் சாலையில் உள்ள எம்.ஜி.நகரில் குடியிருந்து வருபவர் முன்னாள் திமுக எம்.எல்.ஏ ராமலிங்கம், இவரது வீட்டில் இன்று காலை நாமக்கல் லஞ்ச ஒழிப்பு டி.எஸ்.பி சுபாஷினி தலைமையில் நாமக்கல், ஈரோடு மாவட்ட லஞ்ச ஒழிப்பு போலீசார் திடீரென சோதனையில் ஈடுப்பட்டு வருகின்றனர்.
ராமலிங்கம் கடந்த 2021 - 2026 வரை நாமக்கல் எம்.எல்.ஏவாக இருந்து வந்தார். அப்போது தனது SS கன்ஸ்ட்ரக்சன் மூலம் அரசு ஒப்பந்தப் பணிகளை மேற்கொண்டார். இதன் மூலம் முறைக்கேடு நடைபெற்றுள்ளதாக மேலும் முன்னாள் அமைச்சர் கே.என் நேருக்கும் தொடர்பு உள்ளதா எனவும் லஞ்ச ஒழிப்பு போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
முன்னாள் எம்.எல்.ஏ ராமலிங்கம் ரியல் எஸ்டேட், பைனான்ஸ் தொழிலிலும் ஈடுப்பட்டு வருகின்றார் என்பது குறிப்பிடத்தக்கது. நாமக்கல்லில் முன்னாள் எம்.எல்.ஏ ராமலிங்கம் வீட்டில் லஞ்ச ஒழிப்பு போலீசார் திடீரென சோதனை மேற்கொண்டு வருவதால் திமுகவினர் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
மேலும், சென்னையில் கே.என். நேருவின் சகோதரர் ரவிச்சந்திரனுக்குச் சொந்தமான வீடு மற்றும் அலுவலகம் உள்ளிட்ட இடங்களிலும் சோதனை நடைபெற்று வருகிறது. தமிழகம் முழுவதும் 25 இடங்களில் நடைபெறும் இந்தச் சோதனை, விசாரணையின் அடிப்படையில் மேலும் விரிவுபடுத்தப்படலாம் என்றும் அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: 25 இடங்களை சுத்துப்போட்ட DVAC... கே.என்.நேருவுக்கு பெரும் நெருக்கடி... ரெய்டின் பகீர் பின்னணி...!
இதையும் படிங்க: திமுக ஆட்சியில் லஞ்சம்! அமைச்சர் மரிய வில்சனுக்கு எதிரான வழக்கு மனு வாபஸ்! சென்னை ஐகோர்ட் அதிரடி!