மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜிக்கு மனநல சிகிச்சை தேவை என்று அம்மாநில எதிர்க்கட்சித் தலைவர் சுவேந்து அதிகாரி கடுமையாக விமர்சித்துள்ளார். வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் (எஸ்ஐஆர்) குறித்து மமதா பானர்ஜி எழுப்பிய குற்றச்சாட்டுகளுக்கு பதிலளித்தே அவர் இவ்வாறு கூறினார்.
சமீபத்தில் கங்காசாகர் பகுதியில் பேசிய மமதா பானர்ஜி, தேர்தல் ஆணையம் எஸ்ஐஆர் பணியில் பல தவறுகளை செய்துள்ளதாக குற்றம்சாட்டினார். தகுதியுள்ள வாக்காளர்களின் பெயர்களை இறந்துவிட்டதாக குறிப்பிட்டுள்ளதாகவும், பாஜகவின் தகவல் தொழில்நுட்பப் பிரிவு உருவாக்கிய செயலியை தேர்தல் ஆணையம் பயன்படுத்துவதாகவும் அவர் கூறினார். இது சட்டவிரோதம் மட்டுமல்ல, அரசமைப்புச் சட்டத்துக்கும் ஜனநாயகத்துக்கும் எதிரானது என்றும் மமதா விமர்சித்தார்.
இதற்கு பதிலளித்த சுவேந்து அதிகாரி, "மமதா பானர்ஜிக்கு சிறிது மனநல சிகிச்சை தேவைப்படுகிறது. இல்லையெனில் அவர் உச்ச நீதிமன்றத்துக்கு செல்ல வேண்டும்" என்று கிண்டலாக தெரிவித்தார். மமதாவின் குற்றச்சாட்டுகள் அடிப்படையற்றவை என்றும், எஸ்ஐஆர் பணி போலி வாக்காளர்களை அகற்றுவதற்கானது என்றும் அவர் கூறினார்.
இதையும் படிங்க: அடுத்த பாய்ச்சலுக்கான 8 அறிவிப்புகள்… திண்டுக்கல்லில் சர்ப்ரைஸ் கொடுத்த முதல்வர் ஸ்டாலின்…!

இதனிடையே, எஸ்ஐஆர் பணியில் ஏற்பட்ட குழப்பம் குறித்து தில்லியில் உள்ள தேர்தல் ஆணையத்தில் புகார் அளித்துள்ள திரிணமூல் காங்கிரஸ், உச்ச நீதிமன்றத்திலும் வழக்கு தொடர உள்ளதாக அறிவித்துள்ளது. 2026 சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு வாக்காளர் பட்டியல் திருத்தம் மேற்கு வங்கத்தில் பெரும் அரசியல் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
திரிணமூல் காங்கிரஸ் தரப்பில் எஸ்ஐஆர் உண்மையான வாக்காளர்களை பாதிக்கும் என்று குற்றம்சாட்டப்படுகிறது. பாஜக தரப்பில் இது போலி வாக்காளர்களை அகற்றி நியாயமான தேர்தலை உறுதி செய்யும் என்று வரவேற்கப்படுகிறது. இந்த சர்ச்சை மேலும் தீவிரமடைய வாய்ப்புள்ளது.
இதையும் படிங்க: மிகப்பெரிய அரசியல் சக்தியாக உருவெடுத்துவிட்டார் விஜய்!! காங்கிரஸ் நிர்வாகி புகழாரம்! கூட்டணிக்கு அச்சாரம்?!