அன்பில் மகேஸ் பொறியில் சிக்கிய எலி போல துடிப்பதன் காரணம் இப்போதுதான் தெரிகிறது என்று தமிழக பாஜக மூத்த தலைவர் ஹெச். ராஜா தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக ஹெச்.ராஜா தனது ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில், "தமிழகப் பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் சமீபகாலமாக மத்திய அரசுக்கு எதிராக வன்மம் கலந்த விமர்சனங்களை முன் வைப்பதற்கான காரணம் இப்போதுதான் தெரிகிறது. டான் பிக்சர்ஸ் எனும் சினிமா தயாரிப்பு நிறுவனத்தை நடத்தி வரும் ஆகாஷ் பாஸ்கரன் என்பவர் திடீர் தொழிலதிபராக உருவெடுத்து பல கோடி ரூபாய் செலவில் அவர் தயாரித்து வரும் திரைப்படங்கள் அனைத்தையும் கோபாலபுரம் குடும்பத்தின் ரெட் ஜெயண்ட் மூவிஸ் மூலமாக வெளியிட்டு வருகிறார் என்பது தெரிகிறது.

டாஸ்மாக் நிறுவனத்தில் 1000 கோடி ரூபாய்க்கு மேல் முறைகேடு நடந்ததாக சமீபத்தில் டாஸ்மாக் தலைமை அலுவலகத்தில் நடத்தப்பட்ட அமலாக்கத்துறை சோதனையில் தெரிய வந்தது. அதுகுறித்த வழக்கு மற்றும் நீதிமன்ற விசாரணை என மாபெரும் ஊழல் ஒன்றின் செய்தி தமிழகத்தில் அதிர்வலைகளை ஏற்படுத்தியதன் தொடர்ச்சியாக டாஸ்மாக் முறைகேட்டில் தொடர்புடைய நபர்கள் பலர் தொடர்ந்து அமலாக்கத்துறை விசாரணை வளையத்திற்குள் கொண்டு வரப்பட்டு இருக்கின்றனர். அவர்களுள் ஆகாஷ் பாஸ்கரன் என்கிற சினிமா தயாரிப்பாளரும் ஒருவர்.
அவர் யார் என்று பார்த்தால் தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி மற்றும் கோபாலபுரம் குடும்பத்துக்கு நெருங்கிய உறவினர் என்பது உறுதியாகியுள்ளது. அமலாக்கத் துறை ஆகாஷ் பாஸ்கரனை நெருங்குவது தெரிந்துதான் தமிழக டாஸ்மாக் முறைகேடு மற்றும் ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேல் அதில் மிகப்பெரிய ஊழல் நடந்திருப்பதாக அமலாக்கத் துறை அளித்த தகவல் குறித்த விஷயங்களை மக்களின் கவனத்தில் இருந்து திசை திருப்ப வேண்டும் என்பதற்காகத்தான் மத்திய அரசு மீது காழ்ப்புணர்ச்சி கொண்டு பேசத் தொடங்கியுள்ளார்.

தேசிய கல்விக் கொள்கைக்கு எதிராக ஹிந்தி எதிர்ப்பு, மும்மொழி எதிர்ப்பு என்கிற நாடகத்தை அரங்கேற்றி நாள் தோறும் மத்திய அரசுக்கு எதிரான விமர்சனங்களை முன்வைத்தார் என்பது தெரிகிறது. தேசிய கல்விக்கொள்கை எதிர்ப்பு என்பது திமுகவின் கொள்கை சார்ந்த விஷயம் என அன்பில் மகேஷ் கூறுவதெல்லாம் அப்பட்டமான திசை திருப்பும் நாடகம்.
டாஸ்மாக் முறைகேடு தொடர்புடைய நபர்களில் தனது நெருங்கிய உறவினரான ஆகாஷ் பாஸ்கரன் மீது அமலாக்கத்துறை நடவடிக்கை எடுக்கப்போவது உறுதி என்பதை அறிந்து அதன் காரணமாக ஆத்திரம் கொண்டு அவர் மத்திய அரசை விமர்சித்து வருகிறார் என்பது தெள்ளத் தெளிவாக தெரிகிறது." என்று ஹெச். ராஜா தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: திமுக கூட்டணியில் சில ஏமாற்றங்கள்.. கொளுத்தி போடும் துரை வைகோ.!!
இதையும் படிங்க: DMK, BJP கூட நிச்சயமாக கூட்டணி இல்லை.. தமிழக வெற்றிக் கழகம் திட்டவட்டம்..!