காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் அருகே உள்ள அரசு பள்ளி வகுப்பறையில் தமிழக வெற்றிக் கழகத்தைச் சேர்ந்த சுமார் 20க்கும் மேற்பட்ட நிர்வாகிகள் சென்று, முதலமைச்சர் விஜய் புகைப்படத்தை சுவரில் மாட்டியதோடு, ரீல்ஸ் வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் வெளியிட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த நடவடிக்கைக்கு எதிர்க்கட்சியினர் கடும் விமர்சனம் செய்த நிலையில், சம்பவத்துடன் தொடர்புடைய உத்திரமேரூர் மேற்கு ஒன்றிய செயலாளர் ஏ. ராஜேஷ் உடனடியாக பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
தவெக சார்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில், “உத்திரமேரூர் சட்டமன்ற தொகுதி மேற்கு ஒன்றிய செயலாளராக இருந்த ஏ. ராஜேஷ், கழகத்தின் நற்பெயருக்கு அவப்பெயர் ஏற்படுத்தும் வகையில் செயல்பட்டதால், அவர் வகித்து வந்த ஒன்றிய செயலாளர் பொறுப்பு உள்பட அனைத்து பொறுப்புகளிலிருந்தும் இன்று முதல் நீக்கப்படுகிறார்.
இதையும் படிங்க: என்னது எடப்பாடியின் அண்ணன் பொண்ணா..? யாருமா நீ..? வெளுத்து வாங்கிய அதிமுக..!

அடிப்படை உறுப்பினர் உள்பட எல்லா பொறுப்புகளையும் இழந்துள்ளார். கழக நிர்வாகிகளும் தோழர்களும் அவருடன் எந்த வித தொடர்பும் வைத்துக் கொள்ள வேண்டாம்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் அரசு பள்ளி வளாகத்தில் நடைபெற்றுள்ளது என்பது கூடுதல் கவனத்தை ஈர்த்துள்ளது. பள்ளி நேரத்தில் அல்லது பள்ளி செயல்பாட்டுடன் தொடர்புடைய வகையில் அரசியல் நிகழ்வுகள் நடத்தப்படுவது உரியதல்ல என்று பலரும் கருத்து தெரிவித்தனர். எதிர்க்கட்சியினர் இதை “அரசு பள்ளிகளை அரசியல் மயமாக்கும் செயல்” என்று விமர்சித்து, தவெகவுக்கு எதிராக கேள்விகளை எழுப்பினர்.
தமிழக வெற்றிக் கழகம் இந்த சம்பவத்துக்கு உடனடி நடவடிக்கை எடுத்துள்ளது என்பது கட்சியின் ஒழுக்க விதிகளை கடுமையாகப் பின்பற்றுவதை காட்டுகிறது என்று சிலர் வரவேற்றாலும், சம்பவம் நடந்த விதம் மற்றும் அதன் தாக்கம் பற்றி பலரும் விவாதித்து வருகின்றனர். அரசு பள்ளி வகுப்பறை சுவரில் தலைவர்களின் புகைப்படங்கள் மாட்டுவது பற்றிய விவாதம் இப்போது மீண்டும் எழுந்துள்ளது.
இந்த சம்பவம் தவெகவுக்குள் உள் ஒழுங்கு நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்பதற்கான முதல் சமிக்ஞையாகவும் பார்க்கப்படுகிறது. கட்சி தொண்டர்களிடையே ஒழுக்கத்தையும், கட்டுப்பாட்டையும் வலியுறுத்தும் வகையில் இந்த நடவடிக்கை அமைந்துள்ளது. உத்திரமேரூர் பகுதியில் தவெகவின் செயல்பாடுகள் இனி எப்படி இருக்கும் என்பதும் ஆர்வத்துடன் கவனிக்கப்படுகிறது.
இதையும் படிங்க: வறண்ட தருமபுரியை வளமாக்கும் திட்டம்..! அமைச்சர் ஆனந்தை சந்தித்து கோரிக்கை மனுக் கொடுத்த MLA சவுமியா..!!