முன்னாள் சபாநாயகர் அப்பாவு தமிழ்நாடு சட்டமன்றத்தின் வரலாற்று முக்கியத்துவத்தை சுட்டிக்காட்டி தற்போதைய முதலமைச்சர் விஜயை விமர்சித்தார்.தமிழ்நாடு சட்டமன்றம் நூற்றாண்டு பழமையான அமைப்பு என்றும், இந்தியாவிலேயே முதன்முதலாக நீதிக்கட்சி ஆட்சியில் பெண்களுக்கு வாக்குரிமை வழங்கும் சட்டம் இங்குதான் கொண்டுவரப்பட்டது என்றும் அப்பாவு குறிப்பிட்டார். கலைஞர் கருணாநிதி ஆட்சியில் பெண்களுக்கு உள்ளாட்சி அமைப்புகளில் 33 சதவீத இட ஒதுக்கீடு மற்றும் பெண்களுக்கு சொத்து உரிமை வழங்கும் சட்டங்கள் இயற்றப்பட்டன என்று நினைவுகூர்ந்தார்.
முந்தைய ஆட்சிகளில் அரசுப் பணியில் இருக்கும் பெண்களுக்கு முதல் இரண்டு பிரசவங்களுக்கு ஓராண்டு சம்பளத்துடன் கூடிய விடுப்பு வழங்கப்பட்டதுடன், பள்ளி மாணவ மாணவிகளுக்கான முதல்வரின் காலை உணவுத் திட்டம் உள்ளிட்ட பல சமூக நீதி சார்ந்த மசோதாக்கள் கொண்டுவரப்பட்டு இந்தியாவுக்கே வழிகாட்டியதாகவும் கூறினார்.

இவ்வாறு பல முன்னோடி சட்டங்களை இயற்றிய சட்டமன்றத்தின் பெருமையை முதலமைச்சர் அறிய வேண்டும் என வலியுறுத்தினார்.தொடர்ந்து அப்பாவு, தற்போதைய சட்டமன்றக் கட்டடம் முதலமைச்சருக்குப் பிடிக்கவில்லையா அல்லது அங்குள்ள தலைவர்களின் திருவுருவப் படங்களைப் பார்ப்பது பிடிக்கவில்லையா என கேள்வி எழுப்பினார். கடலைப் பார்த்து முதலமைச்சர் அமர வேண்டும் என்ற மூடநம்பிக்கையில் பல கோடி ரூபாய் மக்கள் வரிப்பணத்தைச் செலவு செய்து கலைஞர் கட்டித் தந்த நாமக்கல் கவிஞர் மாளிகையின் 10ஆவது மாடியை ஷூட்டிங் செட் மற்றும் சொகுசு அறைகளாக மாற்றுவதாகக் குற்றம் சாட்டினார்.
இதையும் படிங்க: வீரியமெடுக்கும் டெங்கு பரவல்... அலட்சியத்தின் உச்சம்... சீமான் கண்டனம்.!!
“ஊரான் வீட்டு நெய்யில் ஸ்வீட் செய்யாதீங்க” என்று முன்பு ரீலாக வெளியிட்டதை நினைவுபடுத்தி, அது ஊருக்கு மட்டும் உபதேசமா என கேட்டார்.காலம் காலமாக கடலைப் பார்த்து கடல் தாயை வணங்கி உயிரைப் பணயம் வைத்து மீன்பிடித் தொழில் செய்து வரும் மீனவ மக்களை கடலில் தள்ளிவிட்டு அவர்களின் நிலத்தை அபகரித்து புதிய சட்டமன்றம் கட்ட முயல்வது மீனவ மக்களுக்குச் செய்யும் துரோகம் என்று கடுமையாக விமர்சித்தார். மீனவர்களின் வாழ்வாதாரத்தைப் பாதிக்கும் இத்தகைய நடவடிக்கைகளை கைவிட வேண்டும் என முதலமைச்சரிடம் கோரிக்கை விடுத்தார்.
இதையும் படிங்க: சர்வ சாதாரணமான வெட்டுக் குத்து..! சட்டம் ஒழுங்கு சர்வ நாசம்..! கனிமொழி MP குற்றச்சாட்டு..!!