விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே குடும்பத் தகராறு காரணமாக, 6 வயது மகனைத் தந்தையே விவசாயக் கிணற்றில் வீசியதாகக் கூறப்படும் சம்பவம் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. கிணற்றில் வீசப்பட்ட சிறுவனைத் தேடும் பணியில் தீயணைப்புத் துறையினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே உள்ள நல்லான்பிள்ளைபெற்றாள் பகுதியைச் சேர்ந்தவர் செல்வராஜ் (40). இவரது மனைவி தேவி (35). இந்தத் தம்பதிக்கு நான்கு பெண் குழந்தைகள் உள்ள நிலையில், கடைசியாக ஆண் குழந்தை பிறந்துள்ளது. 6 வயதான அந்தச் சிறுவனின் பெயர் சஞ்சய்.
இந்நிலையில், நேற்று இரவு கணவன், மனைவிக்கு இடையே பணம் செலவு செய்வது தொடர்பாகக் குடும்பத் தகராறு ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த செல்வராஜ், இன்று காலை தனது மகன் சஞ்சயைத் தூக்கிக்கொண்டு சென்று, நல்லான்பிள்ளைபெற்றாள் அரசு மருத்துவமனைக்குப் பின்புறம் உள்ள வெங்கடேசன் என்பவருக்குச் சொந்தமான விவசாயக் கிணற்றில் வீசியதாகக் கூறப்படுகிறது.
இதையும் படிங்க: செஞ்சி சிறுமி வழக்கில் மீண்டும் தாய் மீது திரும்பிய சந்தேகம்... முக்கிய டேட்டாவை தோண்டியெடுக்க சிபிசிஐடி திட்டம்...!
இதுகுறித்து தகவல் அறிந்த அப்பகுதி மக்கள், சத்தியமங்கலம் காவல் நிலையத்திற்குத் தகவல் தெரிவித்தனர். இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீஸார் விசாரணை மேற்கொண்டனர். தொடர்ந்து, கீழ்பென்னாத்தூர் தீயணைப்புத் துறையினருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது.
சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்புத் துறையினர், கிணற்றில் இறங்கி சிறுவனைத் தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர். கடந்த இரண்டு மணி நேரத்திற்கும் மேலாகத் தேடுதல் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. சிறுவன் சஞ்சய் மீட்கப்பட்டாரா என்பது குறித்த தகவல் இதுவரை கிடைக்கவில்லை.
குடும்பத் தகராறு காரணமாகத் தந்தையே தனது 6 வயது மகனைக் கிணற்றில் வீசியதாகக் கூறப்படும் இந்தச் சம்பவம் செஞ்சி பகுதியில் பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. குடும்பப் பிரச்சினைகளில் அப்பாவிக் குழந்தைகள் பாதிக்கப்படும் சம்பவங்கள் தொடர்வது வேதனையை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: செஞ்சி சிறுமி எங்கே?... தாய் கொடுத்த முக்கிய துப்பு... பள்ளிக்குள் நுழைந்த சிபிசிஐடி...!