தமிழ்நாட்டின் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள குலசேகரப்பட்டினத்தில் இந்திய விண்வெளி ஆய்வு மையமான இஸ்ரோவின் இரண்டாவது ராக்கெட் ஏவுதளம் வேகமாக உருவாகி வருகிறது. 2,233 ஏக்கர் பரப்பளவில், ரூ.986 கோடி மதிப்பீட்டில் கட்டப்படும் இந்த ஏவுதளம், 2026-2027 நிதியாண்டில் செயல்பாட்டுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கடந்த 2024ம் ஆண்டு பிப்ரவரி 28-இல் பிரதமர் நரேந்திர மோடி இதற்கான அடிக்கல் நாட்டினார். இதனைத் தொடர்ந்து, ரோகிணி 6 எச் 200 என்ற சிறிய ரக ராக்கெட் சோதனைக்காக வெற்றிகரமாக ஏவப்பட்டது. இந்த ஏவுதளம் புவியின் நிலநடுக்கோட்டுக்கு அருகில் (8.36° வடக்கு) அமைந்திருப்பதால், ராக்கெட் ஏவுதலுக்கு குறைந்த எரிபொருள் தேவைப்படும், இது செலவைக் குறைக்க உதவும். மேலும், தெற்கு நோக்கி 90 டிகிரி கோணத்தில் ஏவுதல் சாத்தியமாகி, இலங்கை மீது பறக்கும் அபாயத்தைத் தவிர்க்கலாம். இதனால், எஸ்எஸ்எல்வி (சிறிய செயற்கைக்கோள் ஏவுதல் வாகனம்) மற்றும் தனியார் ராக்கெட்டுகளை வணிக ரீதியாக ஏவுவதற்கு இந்த தளம் பயன்படுத்தப்படும்.
இதையும் படிங்க: காமன்வெல்த் 2030 முன்மொழிவு... மத்திய அமைச்சரவை ஒப்புதல்..!!
10 முதல் 500 கிலோ எடையுள்ள சிறிய செயற்கைக்கோள்களை குறைந்த உயர புவி சுற்றுப்பாதையில் நிலைநிறுத்துவதற்கு இது ஏற்றது. இஸ்ரோவின் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி மையத்துக்கு மாற்றாக இந்த ஏவுதளம் உருவாக்கப்படுகிறது. இதற்காக, கூடல்நகர், அமராபுரம், மாதவன்குறிச்சி உள்ளிட்ட கிராமங்களில் நிலம் கையகப்படுத்தப்பட்டு, உள்கட்டமைப்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
சுற்றுச்சுவர், நிர்வாக அலுவலகம் மற்றும் தொழில்நுட்ப வசதிகள் அமைக்கப்படுகின்றன. இந்த திட்டம் தமிழ்நாட்டில் பொருளாதார வளர்ச்சியையும், வேலைவாய்ப்புகளையும் ஊக்குவிக்கும். குறிப்பாக, சிவகாசியில் உற்பத்தியாகும் திட எரிபொருள் இந்த ராக்கெட்டுகளுக்கு பயன்படுத்தப்படலாம், இதனால் உள்ளூர் தொழில்கள் பயனடையும்.
இந்நிலையில் குலசேகரப்பட்டினம் ராக்கெட் ஏவுதளத்திற்கான அடிக்கல் நாட்டு விழா மற்றும் பூமி பூஜை இன்று நடைபெற்றது. இதில் இஸ்ரோ தலைவர் நாராயணன் கலந்து கொண்டு அடிக்கல் நாட்டினார். இந்நிகழ்ச்சியில் இஸ்ரோ விஞ்ஞானிகள், தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் இளம்பகவத் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

இதனைத்தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய இஸ்ரோ தலைவர் நாராயணன், இந்திய விண்வெளி துறையில் இன்று முக்கியமான நாள் என்றும், 33 கட்டுமானங்களுக்கான பணிகள் அங்கு நடைபெற்று வருவதாகவும் தெரிவித்தார். அடுத்த ஆண்டு நவம்பர் மாதம் குலசேகரப்பட்டினத்தில் இருந்து ராக்கெட் ஏவப்படும் என்றும், இதற்கான இடத்தை வழங்கிய தமிழக அரசுக்கு நன்றி தெரிவிப்பதாகவும் அவர் கூறினார். இந்த ஏவுதளம் 2027-க்குள் முழுமையாக செயல்பாட்டுக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க: மருத்துவமனையில் நல்லகண்ணு.. நேரில் சென்று நலம் விசாரித்த நடிகர் சிவகார்த்திகேயன்..!!