நீலகிரி மாவட்டம் மசினகுடி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் காட்டு யானைகள் தாக்கும் சம்பவங்கள் அவ்வப்போது நடந்து வருகின்றன. இப்பகுதியில் பயணம் செய்யும் சுற்றுலாப் பயணிகள் மற்றும் குடியிருப்புவாசிகள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்குமாறு வனத்துறை அதிகாரிகள் தொடர்ந்து எச்சரிக்கின்றனர்.
மசினகுடி, முதுமலை போன்ற அடர்ந்த வனப்பகுதிகளில் பயணம் செய்யும் போது வாகனங்களை நிறுத்தவோ, யானைகளை புகைப்படம் எடுக்கவோ கூடாது. வனவிலங்குகள் இருக்கும்போது வாகனத்தின் ஹாரன் அடிப்பது அல்லது சத்தம் போடுவது கூடாது.மாலை 6 மணி முதல் காலை 6 மணி வரை இப்பகுதிகளில் இருசக்கர வாகனங்களில் பயணம் செய்வதைத் தவிர்க்க வேண்டும் போன்ற அறிவுறுத்தல்களும் வனத்துறை சார்பில் பொதுமக்களுக்கு விடுக்கப்பட்டு வருகின்றன.
இதனிடையே, மசினகுடி கல்குவாரி பின்புறம் உள்ள சித்தப்பாஜி கோவில் பூசாரி ராஜப்பன் (40) கோவிலுக்கு சென்றுவிட்டு நேற்று மாலை வீட்டுக்கு திரும்பி வந்துள்ளார். அப்போது அப்பகுதியில் சுற்றித்திரிந்த யானை பூசாரி ராஜப்பனை தாக்கியது. இதில் சம்பவ இடத்திலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
இதையும் படிங்க: ஓட்டு போட ஊருக்கு போன நபருக்கு நேர்ந்த கொடூரம்... சாதி மறுப்பு திருமணத்திற்கு எதிராக சதி... மனைவி பரபரப்பு புகார்...!
அவரது உடலை மீட்ட வனத்துறையினர் உதகை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக எடுத்துச் சென்றனர்.
நீலகிரியில் கடந்த 8 ம் தேதி அய்யங்கொல்லி பகுதியில் யானை தாக்கி ஒருவர் உயிரிழந்த நிலையில் நேற்று இரவு மசினகுடி பகுதியில் ஒருவர் என 4 நாட்களில் 2 பேர் காட்டு யானைகள் தாக்கி உயிரிழந்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
இதையும் படிங்க: நீதித்துறையில் டிஜிட்டல் புரட்சி! ONE CASE ONE DATA திட்டத்தை தொடங்கினார் தலைமை நீதிபதி சூரியகாந்த்!