2026 சட்டமன்ற தேர்தலை அதிமுக மற்றும் பாஜக கட்சிகள் இணைந்து சந்திக்க உள்ளன. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியான நிலையில் இரு கட்சிகளும் தேர்தலை எதிர்கொள்ள தீவிரம் காட்டி வருகின்றன. தற்போது அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி கோவையில் இருந்து தனது சுற்றுப்பயணத்தை தொடங்கியுள்ளார். திமுக அரசின் குறைபாடுகள் தொடர்பாகவும் அதிமுக செய்த சாதனைகள் மற்றும் பாஜக உடனான கூட்டணி குறித்து பேசி வருகிறார். இதற்கிடையில் தமிழகத்தில் கூட்டணி ஆட்சி அமையும் என உள்துறை அமைச்சர் அமித் ஷா பேசி வருகிறார். ஆனால் தனிப் பெரும்பான்மையோடு அதிமுக ஆட்சி அமைக்கும் என எடப்பாடி பழனிச்சாமி கூறி இருக்கிறார். அமித் ஷா, மதுரையில் நடந்த பாஜகவின் கோர் கமிட்டி கூட்டத்தில், 2026 தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் திமுகவை தோற்கடித்து, பாஜக-அதிமுக கூட்டணி ஆட்சி அமைக்கும் என்று கூறியிருந்தார்.

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இந்த கூட்டணி ஆட்சி குறித்து தெளிவான பதிலளிக்கவில்லை என்று விமர்சிக்கப்பட்டது. திமுக கூட்டணி வலுவாக இருப்பதாகவும், அதிமுகவின் கூட்டணி முடிவுகள் தெளிவற்றதாக இருப்பதாகவும் கூறப்பட்டு வருகிறது. இந்த நிலையில், தமிழகத்தில் கூட்டணி ஆட்சி சாத்தியமில்லை என்றும் அதனை மக்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் எனவும் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார். திமுக தலைவர் ஸ்டாலின், 2026 ஆம் ஆண்டிலும் ஆட்சி அமைப்பார் என்றும் திமுக பெரும்பான்மையோடு ஆட்சி அமைக்கும் என்பதால் கூட்டணி ஆட்சி என்ற பேச்சு எழாது என தெரிவித்தார். மேலும், திமுக கூட்டணியில் அதிருப்தி இருப்பதாக வெளிவரும் செய்திகள் அனைத்தும் பொய் என்றும் அவர் கூறினார்.
இதையும் படிங்க: நன்றியை மறந்துவிட்டு பேசக்கூடாது.. வைகோ பேச்சுக்கு ஜெயக்குமாரின் தரமான பதிலடி..!
இதையும் படிங்க: மதிமுகவிலிருந்து மல்லை சத்யா நீக்கமா? - துரை வைகோ சுளீர் விளக்கம்...!