தமிழகத்தில் உள்ள அனைத்து நகராட்சிகள் மற்றும் மாநகராட்சிகளில் நடைபெறும் முக்கியப் பணிகளைக் கண்காணிப்பதற்காகப் புதிய ரியல் டைம் மானிட்டரிங் சிஸ்டம் (Real-Time Monitoring System – RMS) அமைப்பை உருவாக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. இதற்காக முதலமைச்சரின் கட்டுப்பாட்டில் உள்ள நகராட்சி நிர்வாகத் துறையின் சார்பில் டெண்டர் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
தமிழகத்தின் பல்வேறு நகராட்சிகள் மற்றும் மாநகராட்சிகளில் நடைபெறும் பணிகளைச் சென்னையில் இருந்தபடியே நேரடியாகக் கண்காணிக்கும் வகையில் இந்த அமைப்பு உருவாக்கப்பட உள்ளது.
குறிப்பாக, குடிநீர் விநியோகம், பாதாளச் சாக்கடைத் திட்டம், திடக்கழிவு மேலாண்மை உள்ளிட்ட முக்கியப் பணிகளை ஒரே இடத்தில் இருந்து கண்காணிப்பதே இதன் நோக்கமாகும்.
இதையும் படிங்க: நந்தனத்தில் தேவர் சிலைக்கு CM விஜய் மரியாதை.! பசும்பொன் பயணத்தை தவிர்த்தது ஏன்.? வலுக்கும் கேள்விகள்.!!
இந்தப் புதிய அமைப்பு செயல்பாட்டுக்கு வந்தால், எந்தப் பகுதியில் குடிநீர் விநியோகம் நடைபெறவில்லை, எந்தப் பகுதியில் குப்பை சேகரிக்கும் வாகனங்கள் இயங்குகின்றன, பாதாளச் சாக்கடைப் பணிகளின் தற்போதைய நிலை என்ன என்பன போன்ற விவரங்களை அதிகாரிகள் உடனுக்குடன் தெரிந்துகொள்ள முடியும்.
குறிப்பாக, குப்பை சேகரிக்கும் வாகனங்களின் இயக்கத்தையும் ஜிபிஎஸ் வரைபடம் மூலமாக நேரடியாகக் கண்காணிக்க முடியும்.
மேலும், பல்வேறு நகராட்சிகள் மற்றும் மாநகராட்சிகளில் பொதுமக்களிடமிருந்து செயலிகள் வாயிலாகப் பெறப்படும் புகார்களையும் இந்த அமைப்பின் மூலம் கண்காணிக்க முடியும்.
இதனால், குடிநீர் விநியோகம், குப்பை சேகரிப்பு, பாதாளச் சாக்கடை உள்ளிட்ட சேவைகள் தொடர்பாகப் பெறப்படும் புகார்கள் மீது விரைவாக நடவடிக்கை எடுக்கவும், பணிகளின் முன்னேற்றத்தைக் கண்காணிக்கவும் வாய்ப்பு ஏற்படும்.
இதற்காக ரியல் டைம் மானிட்டரிங் சிஸ்டத்தை உருவாக்குவதற்கான டெண்டர் அறிவிப்பு வெளியிடப்பட்டு, இதற்குத் தகுதியான நிறுவனங்களிடமிருந்து விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.
இந்த அமைப்பு நடைமுறைக்கு வரும்போது, தமிழகத்தின் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளின் பணிகளைச் சென்னையிலிருந்தே ஒருங்கிணைத்து கண்காணிக்க முடியும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க: விடிந்ததுமே சர்ப்ரைஸ்... விராலிமலை மக்களே தயாரா?... நவ.2ம் தேதி சி.எம்.விஜய் எடுத்த அதிரடி முடிவு...!