ஒட்டுமொத்தத் திரையுலகமே ஆவலுடன் எதிர்பார்த்து வந்த தளபதி விஜய்யின் 'ஜனநாயகன்' திரைப்படம், தணிக்கைச் சான்றிதழ் தொடர்பான சட்டச் சிக்கல்களால் திட்டமிட்டபடி நாளை மறுநாள் வெளியாகாது எனத் தயாரிப்பு நிறுவனமான கே.வி.என் புரொடக்ஷன்ஸ் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
எச். வினோத் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள 'ஜனநாயகன்' திரைப்படம் வரும் ஜனவரி 9-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், தணிக்கைச் சான்றிதழ் (Censor Certificate) பெறுவதில் நிலவும் இழுபறி மற்றும் தணிக்கை வாரியத்தின் சில ஆட்சேபனைகளால், படத்தின் வெளியீடு தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இதனால் பொங்கல் பண்டிகையைத் தளபதி தரிசனத்துடன் கொண்டாடக் காத்திருந்த லட்சக்கணக்கான ரசிகர்கள் மிகுந்த ஏமாற்றத்திலும் அதிர்ச்சியிலும் ஆழ்ந்துள்ளனர்.
"எங்கள் கட்டுப்பாட்டை மீறிய சில தவிர்க்க முடியாத சூழ்நிலைகளால் 'ஜனநாயகன்' படத்தின் வெளியீட்டைத் தள்ளிவைக்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளோம்" எனத் தயாரிப்பு நிறுவனமான கே.வி.என் புரொடக்ஷன்ஸ் (KVN Productions) மிகுந்த மனவருத்தத்துடன் தனது அதிகாரப்பூர்வ அறிக்கையில் தெரிவித்துள்ளது. "இந்தத் திரைப்படம் தொடர்பான ரசிகர்களின் உற்சாகத்தையும், எதிர்பார்ப்பையும், உணர்ச்சிகளையும் நாங்கள் முழுமையாகப் புரிந்து கொண்டுள்ளோம். இந்த முடிவு எங்கள் யாருக்கும் எளிதான ஒன்றாக இருக்கவில்லை" என அவர்கள் உருக்கமாகக் குறிப்பிட்டுள்ளனர்.
இதையும் படிங்க: ‘ஜனநாயகன்’ ரிலீஸ் ஒத்திவைப்பு! மாலிக் ஸ்ட்ரீம்ஸ் அதிகாரப்பூர்வ அறிவிப்பு - ரசிகர்கள் அதிர்ச்சி!
புதிய வெளியீட்டுத் தேதி விரைவில் அறிவிக்கப்படும் என்றும், அதுவரை ரசிகர்கள் பொறுமை காத்துத் தங்களுக்கு ஆதரவு அளிக்க வேண்டும் என்றும் படக்குழுவினர் வேண்டுகோள் விடுத்துள்ளனர். "உங்களின் அசைக்க முடியாத ஆதரவே எங்களின் மிகப்பெரிய பலம்" எனத் தெரிவித்துள்ள கே.வி.என் நிறுவனம், தணிக்கைச் சிக்கல்கள் முடிந்தவுடன் படத்தின் ரிலீஸ் குறித்த அடுத்தகட்ட அறிவிப்பை வெளியிடும் எனத் தெரிகிறது. இதனால் 'புக் மை ஷோ' போன்ற ஆன்லைன் புக்கிங் தளங்களில் இருந்தும் படத்தின் பெயர்கள் தற்போது தற்காலிகமாக நீக்கப்பட்டுள்ளன.
இதையும் படிங்க: "ஜனநாயகன் படத்த ஏன் இழுத்தடிக்கிறீங்க?" விஜய் பட விவகாரத்தில் சென்சார் போர்டை சாடிய சீமான்!