மகா சிவராத்திரி விழாவையொட்டி வேலூர் பாலாற்றங்கரையில் மயான கொள்ளை திருவிழா கோலாகலமாக நடைபெற்றது. இதில் கடவுள்களின் வேடம் அணிந்து வந்து பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தினர். 60 அடி உயரத்தில் மின்னொளியில் பவனி வந்த பிரம்மாண்டத்தேர் பாலாற்றங்கரையில் கவிழ்ந்ததால் பரபரப்பு.
மகா சிவராத்திரியை முன்னிட்டு அங்காள பரமேஸ்வரி அம்மனுக்கு மாசி மாத அமாவாசை தினத்தையொட்டி மயான கொள்ளை திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்றது. வேலூர் மாநகரின் ஓல்டு டவுண், மக்கான், விருதம்பட்டு, கழிஞ்சூர், மோட்டூர் ஆகிய பகுதிகளைச் சேர்ந்த பிரம்மாண்ட மின் ஒளி தேரில் பூக்களால் அலங்கரிக்கப்பட்ட அங்காள பரமேஸ்வரி அம்மன் பக்தர்களுக்கு காட்சியளித்தார். இதில் அம்மனுக்கு ரூபாய் மாலை பூமாலை எலுமிச்சைபழ மாலைகளை பக்தர்கள் அணிவித்தனர்.
ஆண்கள் பெண்கள் வேடம் அணிந்தும், காளியம்மன் வேடம், காவல் தெய்வங்களின் வேடமணிந்தும் தேர் முன் நடனமாடி பொதுமக்களை அனைவரையும் மகிழ்வித்தனர். ஒவ்வொரு ஆண்டும் சிவராத்திரி மறு நாள் மாசி அமாவாசை அன்று மயான கொள்ளை நடைபெறும்.
இதையும் படிங்க: "எமன் ஏறும் எருமை மாடு... ஒருத்தரையாவது குளோஸ் பண்ணிடுது...” - விஜயை விளாசிய மதுக்கூர் ராமலிங்கம்...!
இதற்காக ஆண்டுதோறும் வேலூர் மக்கான் , ஓல்டுடவுன், தோட்டப்பாளையம், சேண்பாக்கம், கன்சால்பேட்டை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த பக்தர்கள் காளி,அரக்கன்,அம்மன் சிவன் ஹனுமன், முருகன் கருப்பசாமி உள்ளிட்ட பல்வேறு வேடமணிந்து மேளதாளங்கள் முழங்க மக்கானிலிருந்து புறப்பட்டு தோட்டப்பாளையம் பழைய பைபாஸ் சாலை வழியாக வேலூர் புதிய பேருந்து நிலையம் அருகிலுள்ள பாலாற்றில் உள்ள மயானத்தில் விருதம்பட்டு,மக்கான்,தோட்டப்பாளையம் ஆகிய பகுதிகளை சேர்ந்த 7 அம்மன் ரதங்கள் ஆற்றில் இறங்கிய போது பக்தர்கள் பூக்கள் பழம்,சுண்டல் சில்லரை காசுகள் மற்றும் உப்பு மிளகு உள்ளிட்டவைகளை அம்மன் மீது வீசி எறிந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் நேர்த்தி கடனை செலுத்தினார்கள்.
மேலும் சிலர் இறந்த முன்னோர்களின் கல்லறையில் மது, மாமிசம் பழங்கள் ஆகியவைகளையும் படையல் இட்டு வழிபட்டனர். மயான கொள்ளை திருவிழாவை ஒட்டி வேலூர் மாவட்டத்தில் காவல் கண்காணிப்பாளர் சிவராமன் தலைமையில் 1200க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். இதனிடையே விருதம்பட்டு பகுதியில் இருந்து டிராக்டரில் மின் விளக்குகளால் 60 அடி உயரத்தில் அலங்கரிக்கப்பட்ட பிரம்மாண்டமான 3 தேர்கள் பாலாற்றுக்கு ஒன்றன்பின் ஒன்றாக ஊர்வலமாக கொண்டு வந்தனர்.
இதில் கழிஞ்சூர் அங்காள பரமேஸ்வரி அம்மன் தேரும் ஒன்றாகும். இந்த தேர்கள் பக்தர்கள் வெள்ளத்தில் ஊர்வலமாக பாலாற்றுக்கு எடுத்துவரப்பட்டது. விழாவுக்கு பின்னர் மூன்று தேர்களும் ஒன்றன்பின் ஒன்றாக மீண்டும் கோவிலுக்கு செல்லும். அதன்படி இரண்டாவதாக வந்த கழிஞ்சூர் அங்காளபரமேஸ்வரி அம்மன் கோயில் தேர் மீண்டும் கோவிலுக்கு புறப்பட ஆயத்தமானது.
டிராக்டரை பாலாற்றங்கரைக்கு எடுத்து வந்த போது எதிர்பாராத விதமாக சுமார் 60 அடி உயரம் கொண்ட தேர் திடீரென சாய்ந்து விழுந்தது. அப்போது தேருக்கு அடியில் கழிஞ்சூர் பகுதியை சேர்ந்த 5 பேர் சிக்கிக்கொண்டனர். உடனடியாக அங்கிருந்தவர்கள் போலீசார் மற்றும் தீயணைப்பு படைவீரர்கள் உதவியுடன் 5 பேரையும் மீட்டு வேலூர் அடுக்கம்பாறையில் உள்ள அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.
தேர் கவிழ்ந்த பொழுது காவலர்கள், பொதுமக்கள் எதிர் திசையில் இருந்ததால் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.தொடர்ந்து தேரில் சிக்கியிருந்த சாமி சிலையை பக்தர்கள் மீட்கும் பணியில் ஈடுபட்டனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. கடந்த 2024 ஆம் ஆண்டு நடைபெற்ற மயான கொள்ளை திருவிழாவில் பாலாற்றின் உள்ளே மோட்டூர் வெண்மணி நகர் தேர் கவிழ்ந்து விபத்துக்குள்ளான நிலையில் ஒருவர் படுகாயமடைந்தார். தற்போது மீண்டும் தேர் விபத்து சம்பவம் நடைபெற்று உள்ளது.
#WATCH | வேலூர் பாலாற்றங்கரையில் நடைபெற்ற மயான கொள்ளை திருவிழாவில் விபரீதம்.
60 அடி உயரம் உள்ள அலங்கரிக்கப்பட்ட தேர் கவிழ்ந்து விபத்து. பொதுமக்கள் எதிர் திசையில் இருந்ததால் நல்வாய்ப்பாக உயிர்த் தப்பினர். 5 பேருக்கு காயம்.#SunNews | #Vellore pic.twitter.com/U0vLFNf95S
— Sun News (@sunnewstamil) February 17, 2026
இதையும் படிங்க: டெல்லி ஏ.ஐ. உச்சி மாநாடு 2026... பாரத் மண்டபத்தில் பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்!