திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் நடைபெறவுள்ள கார்த்திகை தீபத் திருவிழாவிற்கான முன்னேற்பாடுகள் குறித்து பொதுப்பணி மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா மற்றும் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சி. ரமேஷ் ஆகியோர் ஆய்வு மேற்கொண்டனர். இந்த ஆய்வின்போது விழாவுக்கான அனைத்து ஏற்பாடுகளும் முறையாக நடைபெறுவதை உறுதிசெய்யும் வகையில் அதிகாரிகளுடன் கலந்துரையாடினர்.
உலகப் புகழ்பெற்ற இந்தத் திருவிழா வரும் நவம்பர் 15ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி பத்து நாட்கள் நடைபெற உள்ளது. அதன் நிறைவாக நவம்பர் 24ஆம் தேதி அதிகாலை பரணி தீபம் ஏற்றப்படும். அதே நாள் மாலை 2668 அடி உயரமுள்ள அண்ணாமலை உச்சியில் மகா தீபம் ஏற்றப்படும். இந்த விழாவின்போது லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை தருவார்கள் என்பதால் அவர்களுக்கான அடிப்படை வசதிகள், பாதுகாப்பு ஏற்பாடுகள், தூய்மைப் பணிகள் மற்றும் போக்குவரத்து வசதிகள் ஆகியவற்றில் சிறப்பு கவனம் செலுத்தப்படுகிறது.

தேர் திருவிழா உள்ளிட்ட முக்கிய நிகழ்வுகளுக்கான வாகனங்கள் மற்றும் தேர்களின் சீரமைப்புப் பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகின்றன. கோயில் சுற்றுவட்டாரச் சாலைகள், மாட வீதிகள் ஆகியவற்றில் மேம்பாட்டுப் பணிகளும் நடைபெற்று வருகின்றன. பக்தர்களுக்கு தண்ணீர், உணவு, மருத்துவ உதவி, கழிப்பறை வசதிகள் போன்றவை போதுமான அளவில் கிடைக்கும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. கூட்ட நெரிசலைக் கட்டுப்படுத்தும் வகையில் பாதுகாப்பு ஏற்பாடுகளும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
இதையும் படிங்க: புரட்டாசி பொறந்தாச்சு..! திருவண்ணாமலை பூத நாராயணருக்கு சிறப்பு பூஜை..!!
அமைச்சர்கள் இந்த ஆய்வின்போது அனைத்துத் துறை அதிகாரிகளிடமும் விழா முழுமையாக வெற்றிகரமாக நடைபெற வேண்டும் என அறிவுறுத்தினர். பக்தர்களுக்கு எந்தவித சிரமமும் ஏற்படாத வகையில் முன்னேற்பாடுகளை விரைவுபடுத்தவும், தேவையான இடங்களில் கூடுதல் வசதிகளை ஏற்படுத்தவும் உத்தரவிட்டனர். கார்த்திகை தீபத் திருவிழா தமிழகத்தின் முக்கிய ஆன்மீக விழாக்களில் ஒன்றாகும். அதனை சிறப்பாக நடத்தி முடிப்பதற்கு அரசும் கோயில் நிர்வாகமும் இணைந்து செயல்பட்டு வருகின்றன.
இதையும் படிங்க: ஜெம் வீரமணி விவகாரம்... ரூ.1 கோடி மான நஷ்ட ஈடு வழக்கு... அமைச்சர்கள் மேல்முறையீடு..!!