புதுடில்லி: தலைமைத் தேர்தல் ஆணையருக்கு எதிராகவும், வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிரத் திருத்தப் பணிகளைக் கண்டித்தும் டில்லியில் நடத்தப்பட்டு வந்த போராட்டங்களை காங்கிரஸ் தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளதால், இந்தியா கூட்டணியில் அதிருப்தி ஏற்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
போராட்டத்தைத் தொடர்ந்து முன்னெடுத்துச் செல்ல வேண்டும் என சில கூட்டணிக் கட்சிகள் விரும்பிய நிலையில், காங்கிரஸ் தலைமை எடுத்த முடிவு கூட்டணிக்குள் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.
வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிரத் திருத்தப் பணிகளில் முறைகேடுகள் நடைபெறுவதாகக் குற்றம்சாட்டி, தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாருக்கு எதிராக காங்கிரஸ் தலைமையிலான இந்தியா கூட்டணிக் கட்சிகள் டில்லியில் பல்வேறு போராட்டங்களை நடத்தின.
இதையும் படிங்க: பஞ்ச் பேசும் நடிகர் எங்கே போனார்? முதல்வர் விஜய்யையும் காங்கிரஸையும் வறுத்தெடுத்த தயாநிதி மாறன்!
இந்த விவகாரத்தில் எதிர்க்கட்சிகள் தொடர்ந்து அழுத்தம் கொடுத்து வந்த நிலையில், போராட்டங்களை ஒருங்கிணைத்து நடத்துவது தொடர்பாக கூட்டணிக்குள் ஆலோசனைகளும் நடைபெற்றன.
சமீபத்தில், மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி இல்லத்தில் நடைபெற்ற தேநீர் விருந்தில் பங்கேற்ற விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன், கூட்டணியில் உள்ள ஒவ்வொரு கட்சியும் தினமும் ஒரு நாள் போராட்டத்தை முன்னெடுக்கும் வகையில் திட்டமிடலாம் எனக் கருத்துத் தெரிவித்ததாகக் கூறப்படுகிறது. இந்த யோசனைக்கு இடதுசாரிக் கட்சித் தலைவர்களும் ஆதரவு தெரிவித்ததாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஆனால், காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே மற்றும் கட்சியின் மூத்த தலைவர்களான சோனியா காந்தி, பிரியங்கா காந்தி உள்ளிட்டோர் போராட்டத்தைத் தற்காலிகமாக நிறுத்தி வைக்க விரும்பியதாகக் கூறப்படுகிறது. இந்தியா கூட்டணி சார்பில் உச்ச நீதிமன்றத்தில் தொடரப்பட்டுள்ள வழக்கின் முடிவு தெரிந்த பிறகு, அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து முடிவு செய்யலாம் என்பதே இதற்குக் கூறப்படும் காரணமாகும்.
இதனால், போராட்டத்தை உடனடியாகத் தொடர வேண்டும் என விரும்பிய சில கூட்டணிக் கட்சிகள் அதிருப்தி அடைந்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. குறிப்பாக, டில்லியில் கடந்த 6, 7-ஆம் தேதிகளில் ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி உள்ளிட்டோர் பங்கேற்ற ஆர்ப்பாட்டம், கூட்டணியின் ஒட்டுமொத்தப் போராட்டமாக இல்லாமல் காங்கிரஸ் தலைவர்களை மையப்படுத்தி நடைபெற்றதாக சில கூட்டணித் தலைவர்கள் கருதுவதாகக் கூறப்படுகிறது. போராட்டம் குறித்து மற்ற கட்சிகளுக்கு முன்கூட்டியே தகவல் தெரிவித்திருக்க வேண்டும் என்றும் அவர்கள் விரும்பியதாகத் தெரிகிறது.
இதற்கிடையே, திரிணமூல் காங்கிரஸ், சமாஜ்வாதி, இடதுசாரிக் கட்சிகள், சிவசேனா, தேசியவாத காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் பிற அமைப்புகளின் போராட்டங்களுக்கும் ஆதரவு தெரிவித்துள்ளதாகக் கூறப்படுகிறது. கூட்டணிக்குள் கருத்து வேறுபாடுகள் நிலவுவதுடன், அடுத்தடுத்து வரும் பண்டிகைகளும் போராட்டங்களைத் தற்காலிகமாக நிறுத்துவதற்குக் காரணமாகக் கூறப்படுகின்றன.
உச்ச நீதிமன்ற வழக்கின் முடிவு, கூட்டணிக் கட்சிகளிடையேயான ஆலோசனை ஆகியவற்றைப் பொறுத்தே அடுத்தகட்டப் போராட்டம் அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த விவகாரம் இண்டி கூட்டணியின் ஒருங்கிணைப்புத் திறன் குறித்த கேள்விகளையும் எழுப்பியுள்ளது.
இதையும் படிங்க: மாணிக்கம் தாகூர் வாயை அடக்க வேண்டும்! திமுக தலைமை கழகம் எச்சரிக்கை!