இந்தியா- பாகிஸ்தான் போர் பதற்றம் காரணமாக நிறுத்தப்பட்ட ஐபிஎல் டி20 தொடரை மீண்டும் நடத்த பிசிசிஐ ஆயத்தமாகி வருகிறது. அனைத்து அணிகளும் தங்கள் வீரர்களை ஒருங்கிணைத்து தயாராக இருக்கும்படி பிசிசிஐ உத்தரவிட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

வரும் 16ம் தேதி முதல் நிறுத்தப்பட்டிருந்த ஐபிஎல் டி20 தொடரை நடத்தவும் பிசிசிஐ திட்டமிட்டு ஆலோசித்து வருகிறது. இறுதி முடிவை விரைவில் அறிவிக்கலாம் எனத் தெரிகிறது. பஞ்சாப் கிங்ஸ் அணியைத் தவிர அனைத்து அணிகளும் தங்களுக்குரிய சொந்த மைதானம் இருக்கும் நகரில் ஒன்று கூட பிசிசிஐ உத்தரவிட்டுள்ளது.
இதையும் படிங்க: காஷ்மீர் தீவிரவாத தாக்குதல்.. பிசிசிஐ அஞ்சலி..! MI vs SRH ஆட்டத்தில் பட்டாசு இல்லை, ஒரு நிமிடம் மெளனம்..!
ஏற்கெனவே இருக்கும் அட்டவணைபடி தொடரை தொடர்ந்து நடத்த முடியாது என்பதால், புதிய அட்டவணைப்படி எஞ்சியுள்ள போட்டிகளை நடத்தவும் பிசிசிஐ முடிவு செய்துள்ளதாகத் தெரிகிறது. ஐபிஎல் தொடர் தொடங்கும் தேதி அறிவிக்கப்படும்போது, புதிய அட்டவணையும் அறிவிக்கப்படும் எனத் தெரிகிறது.

பிசிசிஐ நிர்வாகி ஒருவர் கூறுகையில் “ பஞ்சாப் அணி தவிர மற்ற அணிகள் அவர்களுக்குரிய சொந்த மைதானம் இருக்கும் நகரில் ஒருங்கிணைய பிசிசிஐ கேட்டுக்கொண்டுள்ளது. பஞ்சாப்அணி வேறு ஏதாவது நடுநிலை மைதானத்துக்கு அழைத்துவரப்படலாம் ஆனால் இடம் ஏதும் தேர்வாகவில்லை. நிர்ணயிட்ட தேதிக்குள் ஐபிஎல் தொடரை முடிக்க பிசிசிஐ திட்டமிட்டுள்ளதால், டபுல்ஹெட்டர் போட்டிகள் அதிகமாக நடத்தவும் திட்டமிட்டுள்ளது” எனத் தெரிவித்தார்.
ஐபிஎல் தலைவர் அருண் துமால் கூறுகையில் “இந்தியா-பாகிஸ்தான் இடையே போர் நிறுத்த ஒப்பந்தம் அமலாகியுள்ளதால் உடனடியாக ஐபிஎல் போட்டித் தொடரை நடத்த தயாராகுவோம்” எனத் தெரிவித்தார். இதற்கிடையே எஞ்சியுள்ள போட்டிகளை தென் இந்தியாவில் அமைந்துள்ள சென்னை, பெங்களூரு, ஹைதராபாத், விசாகப்பட்டிணம் ஆகிய நகரங்களில் உள்ள மைதானத்தில் நடத்தவும் பிசிசிஐ திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

பஞ்சாப்- டெல்லி இடையிலான ஆட்டம் இமாச்சலப்பிரதேசம் தரம்சலாவில் நடந்து கொண்டிருக்கும் போது இந்தியா-பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் அதிகமாகி மின்விளக்குகள் அணைக்கப்பட்டு பிளாக்கவுட் அமல்படுத்தப்பட்டது. இதனால் போட்டி ரத்து செய்யப்பட்டது. இந்த போட்டி மீண்டும் நடத்தப்படுமா அல்லது ஒரு புள்ளி வழங்கப்படுமா என்பது தெரியவில்லை.
மத்திய அரசிடம் இருந்து தெளிவான உத்தரவுகளுக்காக பிசிசிஐ காத்திருக்கிறது. மத்திய அரசு ஒப்புதல் கிடைத்துவிட்டால் நிறுத்தப்பட்ட ஐபிஎல் தொடரை மீண்டும் மே 16ம் தேதி முதல் தொடங்க பிசிசிஐ தயாராகிவிடும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
பிசிசிஐ செயலாளர் தேவாஜித் சைகா “தி இந்து ஸ்போர்ட்ஸ் ஸ்டார்” இதழுக்கு அளித்த பேட்டியில் கூறுகையில் “ இந்தியா-பாகிஸ்தான் போர் பதற்றம் காரணமாக ஐபிஎல் தொடரை 7 நாட்களுக்கு நிறுத்தியுள்ளோம். 3 நாட்கள்தான் ஆகியுள்ளன, இன்னும் 4 நாட்கள் உள்ளன. அனைத்து சூழல்களையும், பிசிசிஐ தொடர்ந்து கண்காணித்து வருகிறது, அரசின் அனுமதி கிடைத்தவுடன், அணி நிர்வாகிகளிடம் பேசி போட்டித் தொடர் தொடங்கும் தேதி முடிவாகும்.

அடுத்த சிலநாட்களில் அணி நிர்வாகிகளுடனும், ஒளிபரப்பாளர்கள், ஸ்பான்சர்களுடனும் பேச்சு தொடங்கும், எப்போது எஞ்சிய போட்டிகளை நடத்துவது, எப்போது முடிப்பது குறித்து இறுதி முடிவு எடுப்போம். மீண்டும் ஐபிஎல் போட்டித் தொடரை தொடங்கும் முன், மத்திய அரசின் அனுமதி முக்கியம். அரசின் அனுமதி கிடைத்தவுடன் ஆலோசனையை முடித்துபிசிசிஐ தேதியை அறிவிக்கும்” எனத் தெரிவித்தார்.
பல அணிகள் வெளிநாட்டு வீரர்களை தங்கள் நாட்டுக்கு அனுப்பியுள்ளன. அவர்களை மீண்டும் இந்தியாவுக்கு வருமாறு கேட்டுள்ளன, அவர்கள் சரியான நேரத்துக்குள் இந்தியா வருவதும் கடினம்தான். ஐபிஎல் போட்டித் தொடர் மீண்டும் தொடங்கும் தேதி தெளிவாக தெரியாதவரை, வீரர்களை இந்தியாவுக்கு மீண்டும் அழைப்பது கடினம். அடுத்த 2 நாட்களில் தேதி வெளியாகும் என நம்புகிறோம்” என ஐபிஎல் அணி நிர்வாகி ஒருவர் தெரிவித்தார்.
இதையும் படிங்க: பிசிசிஐ மத்திய ஒப்பந்தத்தில் மீண்டும் ஸ்ரேயாஸ், இஷான் கிஷன்.. கோலி, ரோஹித் நிலை என்ன?