அமெரிக்காவின் நியூஜெர்சி நகரில் நடைபெறும் பிபா உலகக் கோப்பை கால்பந்து தொடரின் இறுதிப்போட்டியில், நடப்பு சாம்பியன் அர்ஜென்டினா மற்றும் வலுவான ஸ்பெயின் அணிகள் இன்று மோதுகின்றன. இரு அணிகளும் தொடரில் அபார ஆட்டத்தை வெளிப்படுத்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளதால், உலக சாம்பியன் பட்டத்தை யார் கைப்பற்றுவார்கள் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே உச்சத்தை எட்டியுள்ளது.
இந்த போட்டி குறித்து இந்திய கால்பந்து அணியின் தலைமை பயிற்சியாளர் காலித் ஜமில் தனது கருத்தை பகிர்ந்துள்ளார். அவரது குடும்பத்தினர் அர்ஜென்டினாவுக்கு ஆதரவு அளிப்பதாகவும், தனக்கும் லியோனல் மெஸ்ஸியின் ஆட்டம் மிகவும் பிடிக்கும் என்றும் கூறிய அவர், தற்போதைய பார்மைப் பார்க்கும்போது ஸ்பெயின் அணிக்கே சற்று அதிக வாய்ப்பு இருப்பதாக தெரிவித்துள்ளார்.
தற்போதைய உலகக் கோப்பை தொடரில் ஸ்பெயின் அணி ஒரு கோல் மட்டுமே விட்டுக் கொடுத்திருப்பதையும், அந்த அணியின் மத்தியக்கள வீரர்கள் மற்றும் முன்களத்தில் லமின் யமால் சிறப்பாக செயல்பட்டு வருவதையும் அவர் சுட்டிக்காட்டினார்.
இதையும் படிங்க: இதய துடிப்பை எகிற வைத்த ஆட்டம்!! இங்கிலாந்து கோல் மழை!! பிரான்ஸை வீழ்த்தி த்ரில் வெற்றி!
போட்டியின் தொடக்கத்திலேயே ஸ்பெயின் கோல் அடித்துவிட்டால் ஆட்டம் அவர்களது கட்டுப்பாட்டுக்குள் செல்லும் என்றும், 70 நிமிடங்கள் வரை அர்ஜென்டினா கோல் வாங்காமல் தடுத்துவிட்டால் இறுதிக்கட்டத்தில் அந்த அணி கம்பேக் கொடுக்க வாய்ப்பு இருப்பதாகவும் அவர் கூறினார்.

இந்திய அணியின் முன்னாள் வீரர் கவுர்மாங்கி சிங், இரு அணிகளும் சம பலம் கொண்டவை என்பதால் வெற்றி வித்தியாசம் மிகவும் குறைவாக இருக்கும் என்றார். ஸ்பெயின் அணியின் தற்காப்பு மற்றும் கோல்கீப்பர் உனாய் சைமன் சிறப்பாக செயல்பட்டு வருவதாகவும், மறுபுறம் அர்ஜென்டினா எந்த சூழலிலும் பதற்றமடையாமல் விளையாடும் அனுபவம் கொண்ட அணி என்றும் குறிப்பிட்டார்.
இந்திய கோல்கீப்பர் குர்பிரீத் சிங் சாந்து, அர்ஜென்டினா கோல்கீப்பர் எமிலியானோ மார்டினஸின் அனுபவம் அணிக்கு பலம் என்றாலும், ஸ்பெயின் அணியின் தற்காப்பு வரிசை மிகவும் வலுவாக இருப்பதால் கூடுதல் நேரம் வரை போட்டி சென்றால் ஸ்பெயினுக்கு வெற்றி வாய்ப்பு அதிகம் என கணித்துள்ளார்.
உலகம் முழுவதும் கோடிக்கணக்கான ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்க்கும் இந்த இறுதிப்போட்டி, மெஸ்ஸியின் அனுபவத்திற்கும் யமாலின் இளமைத் திறமைக்கும் இடையிலான மோதலாக மட்டுமல்லாமல், உலகின் இரண்டு சிறந்த அணிகளின் பலப்பரீட்சையாகவும் பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க: உலகக் கோப்பை கால்பந்து திருவிழா! 'ரவுண்ட் - 16' நாக்-அவுட் சுற்று! காலிறுதிக்கு முன்னேறிய அணிகள்!