தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான சூர்யா இன்று தனது பிறந்த நாளைக் கொண்டாடி வருகிறார். உலகம் முழுவதும் உள்ள அவரது ரசிகர்கள் மற்றும் சினிமா பிரபலங்கள் சமூக வலைதளங்களில் அவருக்கு வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர். இதனை சிறப்பாக்கும் வகையில், சூர்யா தற்போது நடித்து வரும் திரைப்படமான ‘கருப்பு’ திரைப்படத்தின் டீசர் இன்று காலை 10 மணிக்கு வெளியிடப்படும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. இப்படம் சூர்யா மற்றும் நகைச்சுவை நடிகராக தொடங்கி தற்போது இயக்குநராக உயர்ந்த ஆர்.ஜே. பாலாஜியின் இயக்கத்தில் உருவாகி வருகிறது. இப்படத்திற்கு சாய் அபயங்கர் இசையமைத்து இருக்கிறார்.
படத்தின் கதைக்களம் கிராமிய வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்டது எனத் தெரிகிறது. இதனை உறுதி செய்யும் விதமாக வெளியான ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரில் சூர்யா, வேஷ்டி மற்றும் சட்டை அணிந்து, கிராமத்து தோற்றத்த்தில் காட்சியளித்து இருந்தார். இந்திய சினிமாவில் பெரிய ஹீரோக்களின் டீசர் மற்றும் ட்ரெய்லர்கள் வெளியாகும் போது, அவற்றை திரையரங்குகளில் வெளியிட்டு கொண்டாடும் கலாசாரம் சமீபகாலமாக தமிழகத்தில் உள்ளது. அந்த வரிசையில், ‘கருப்பு’ திரைப்படத்தின் டீசரும் இன்று சென்னை கோயம்பேடு பகுதியில் உள்ள ரோகிணி திரையரங்கில் திரையிடப்பட்டது. இப்படி இருக்க, இந்த டீசரை காண, ரசிகர்கள் திரையரங்கிற்கு வருவதில் பெரும் ஆர்வம் காட்டியிருந்தனர். ஆனால், தற்போது இது தொடர்பான ஒரு சர்ச்சையான தகவல் வெளியாகியுள்ளது. பொதுவாக, திரைப்பட டீசர்கள் மற்றும் ட்ரெய்லர்கள், அனைத்தும் புதிய திரைப்படங்களின் இடையே அல்லது முடிவில் தான் இலவசமாக திரையிடப்படும். ஆனால் இந்த முறை, ‘கருப்பு’ படத்தின் டீசருக்காக தனித்து ஒரு ஷோ தயார் செய்து, அதன் பார்வைக்கு டிக்கெட் விலை நிர்ணயம் செய்து ரூ. 57க்கு கட்டணம் வசூலிக்கப்பட்டது. இது குறித்து சினிமா விமர்சகர் ப்ளு சட்டை மாறன் தனது எக்ஸ் தளப் பக்கத்தில் கடுமையாக கேள்வி எழுப்பியுள்ளார்.

அதில் "சூர்யாவின் ‘கருப்பு’ பட டீசரை கோயம்பேடு ரோகிணி தியேட்டரில் இன்று மாலை பார்க்க ரூ. 57 கட்டணம். நீங்கள் யூட்யூபில் பார்க்க விரும்புகிறீர்களா அல்லது 57 ரூபாய் தந்து தியேட்டரில் பாரக்க போகிறீர்களா? வழக்கமாக... டீசர், ட்ரெய்லர்கள் எல்லாம் நாம் தியேட்டரில் காணும் வேறொரு படத்தின்போது வெளியாகும். அதற்கு தனி கட்டணம் இல்லை. கடந்த சில வருடங்களாக இதற்கென்று தனி ஷோ போட்டு... டிக்கெட் விற்கிறார்கள். இது சட்டப்படி, அரசு அல்லது நீதிமன்றத்தின் அனுமதியுடன் நடக்கிறதா? " என கேள்வி எழுப்பியுள்ளார்.

இவரது பதிவு வெளியாகி, ரசிகர்கள் மத்தியில் விவாதத்தை கிளப்பியுள்ளது. சினிமா டீசர்களுக்கான தனி திரையிடல் என்பது ஒரு புதிய கலாசாரமாக வளர்ந்துவரும் நிலையில், அதற்கு கட்டணம் வசூலிப்பது போன்ற சட்டரீதியான அனுமதி பற்றிய கேள்விகள் தற்போது அதிகரித்து வருகின்றன. திரைப்படங்கள் வெளிவரும் போது அதன் ப்ரோமோஷன் பாகமாக டீசர் மற்றும் ட்ரெய்லர்களை முழு நீள திரைப்படங்கள்-க்கு முன் திரையிடுவது தான் வழக்கம். இந்த நிலையில், ஒரு டீசருக்கே தனி ஷோ போட்டு, கட்டணம் வசூலிப்பது, ரசிகர்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளது. சில ஆண்டுகளாகவே, ‘மாஸ்’ ஹீரோக்களின் டீசர்கள் மற்றும் ட்ரெய்லர்கள் வெளியாவதற்கான நிகழ்வுகள், ஒரு சிறப்பு திரையரங்கு அனுபவமாக மாற்றப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: மிரட்டலாக வந்த சூர்யாவின் ‘கருப்பு’ பட டீசர்..! ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது இணையத்தில் ட்ரென்டிங்..!
அந்த வகையில் ‘கருப்பு’ திரைப்படம் குறித்த வரவேற்பு, சூர்யாவின் பிறந்த நாள் கொண்டாட்டம், ரசிகர்களின் கூட்டம் ஆகியவை அனைத்தையும் இணைத்து பார்க்கும்போது, இது ஒரு விளம்பர யுக்தி என பார்க்கப்படுகிறது. ஆனால், இதற்கான சட்டபூர்வ அனுமதிகள், திரையரங்கு ஒப்பந்தங்கள் போன்றவை தெளிவாக முன்வைக்கப்படாதது, இந்த சர்ச்சைக்கு காரணமாக அமைந்துள்ளது. இந்நிலையில், தயாரிப்பாளர் தரப்பிலிருந்தோ, திரையரங்குப் பொறுப்பாளர்களிடமிருந்தோ இந்த சர்ச்சையைத் தொடர்ந்து அதிகாரப்பூர்வ விளக்கம் வெளிவரவில்லை. இது போன்ற விளம்பர முயற்சிகள் பொதுத்துறை ஒழுங்கு முறைப்படுத்தலுக்கு உட்பட வேண்டுமா? என்பது குறித்து தற்போது சினிமா வட்டாரங்களில் விவாதங்கள் எழுந்துள்ளது.

இது ஒருபக்கம் இருந்தாலும் 'கருப்பு’ திரைப்படம் குறித்து மேலும் அப்டேட்களும், விமர்சனங்களும் பின் வரும் நாட்களில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க: பாலியல் தொல்லை கொடுத்த ஹீரோ.. தைரியமாக புகார் கொடுத்த ஹீரோயினுக்கு நூதன மிரட்டல்..! வீடியோ மூலம் கதறல்..!