நேரலை விவாதத்துக்கு டெலி பிராம்ட்டருடன் வாருங்கள் என்று பிரதமர் மோடிக்கு மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி அழைப்பு விடுத்துள்ளார்.
மேற்கு வங்கத்தின் அலிப்பூர்துவாரில் நகர எரிவாயு விநியோகத் திட்டத்துக்கு பிரதமர் நரேந்திர மோடி அடிக்கல் நாட்டி பேசுகையில், “மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணமூல் காங்கிரஸ் ஆட்சி கொடூரமானது (நிர்மம்தா), ஊழல் நிறைந்தது. மேற்கு வங்க மக்கள் மாற்றத்தையும் நல்லாட்சியையும் விரும்புகிறார்கள்" என்று மோடி தெரிவித்திருந்தார்.

பிரதமரின் இந்த விமர்சனத்துக்கு மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி பதிலடி கொடுத்திருக்கிறார். "நான் உங்களுக்கு (பிரதமர் மோடி) சவால் விடுகிறேன். என்னுடன் ஒரு தொலைக்காட்சி நேரடி விவாதத்துக்கு வாருங்கள். நீங்கள், உங்கள் டெலிபிராம்ப்ட்டரையும் கொண்டுவரலாம். எதிர்க்கட்சித் தலைவர்கள் சர்வதேச அளவில் தேசத்தின் நலன்களை பாதுகாக்க முயற்சி செய்துகொண்டு இருக்கும் வேளையில், மத்திய அரசு அரசியல் ஹோலி விளையாடிக் கொண்டிருக்கிறது.
எதிர்க்கட்சிகள் உலக அரங்கில் நம் நாட்டை பிரதிநிதித்துவப்படுத்தும் வேளையில், பிரதமர் மோடி இன்று பேசியிருப்பது எங்களை அதிர்ச்சிக்குள்ளாக்கி இருப்பதோடு வருத்தமடையவும் செய்துள்ளது.
பிரதமர் முன்னிலையில் அவருடைய அமைச்சர் ஒருவர், ஆபரேஷன் சிந்தூர் போல, ஆபரேஷன் பெங்கால் நடத்துவோம் என்று கூறியுள்ளார். நான் உங்களுக்கு சவால் விடுகிறேன், தைரியம் இருந்தால், நாளையே தேர்தலை நடத்துங்கள். உங்களின் சவாலை ஏற்க நாங்களும், மேற்கு வங்க மக்களும் தயார். காலம் எப்போதும் ஒரு காரணி என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

வெளிநாடுகளுக்குச் சென்றுள்ள குழுவில் எங்களின் பிரதிநிதி அபிஷேக் பானர்ஜியும் ஓர் அங்கம். தினந்தோறும் அவர் பயங்கவாதம், பயங்கரவாதிகளுக்கு எதிராக பேசி வருகிறார். அதேநேரத்தில் மோடியோ பிரதமராக இல்லாமல், பாஜக தலைவராக உங்களுக்கு முழு ஆதரவு அளிக்கும் அரசை (மேற்கு வங்க அரசு) விமர்சனம் செய்கிறீர்கள். மேற்கு வங்க அரசை குற்றம் சாட்டுகிறீர்கள். எதிர்க்கட்சிகளைக் குறை கூற விரும்புகிறீர்கள். இந்த நேரத்தில் பாஜக, ஜூம்லா கட்சிகளைப் போல விஷயங்களை அரசியலாக்க முயற்சிக்கிறது. இந்த மாதிரி பேசுவது சரி இல்லை. ஆபரேஷன் சிந்தூர் குறித்து எனக்கு எந்தக் கருத்தும் இல்லை. ஆனால், ஒவ்வொரு பெண்ணுக்கும் மரியாதை உண்டு என்பதை நினைவில் கொள்ளுங்கள்" என்று மம்தா கடுமையாக சாடி உள்ளார்.
இதையும் படிங்க: பாக். தாக்குதலால் பாதிக்கப்பட்ட காஷ்மீர் மக்கள்... பிரதமர் மோடிக்கு ராகுல் காந்தி கடிதம்!!
இதையும் படிங்க: விசைப்படகு மீனவர்களின் வாழ்வாதாரத்தை காக்க ரூ.8 லட்சம்... முதல்வர் மு.க.ஸ்டாலின் சூப்பர் அறிவிப்பு!!