தமிழக காங்கிரசில் உள்கட்சி அதிருப்தி அதிகரித்து வரும் நிலையில், முன்னாள் மத்திய அமைச்சர் ப. சிதம்பரத்தின் ஆதரவாளர்கள் பலர் தமிழக வெற்றிக் கழகத்தில் (த.வெ.க.) இணையும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. கட்சிப் பதவிகள் மற்றும் சட்டசபை தேர்தலில் போட்டியிடும் வாய்ப்பு கிடைக்காததால் இந்த மாற்றம் நடைபெற்று வருவதாக அரசியல் வட்டாரங்களில் பேசப்படுகிறது.
தமிழக காங்கிரசில் ப. சிதம்பரம் மற்றும் அவரது மகன் கார்த்தி சிதம்பரத்திற்கு மாநிலம் முழுவதும் தனிப்பட்ட ஆதரவாளர்கள் உள்ளனர். முன்னாள் தமிழக காங்கிரஸ் தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவனின் ஆதரவாளர்களில் ஒரு பகுதியும் இந்த அணியுடன் தொடர்ந்து செயல்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இருப்பினும், சமீபத்திய சட்டசபை தேர்தலின் போது தனது ஆதரவாளர்களுக்கு அதிகளவில் தொகுதிகளை பெற்றுத் தரும் முயற்சியில் ப. சிதம்பரம் ஈடுபட்டாலும், எதிர்பார்த்த அளவில் வாய்ப்புகள் கிடைக்கவில்லை என கூறப்படுகிறது.
இதன் காரணமாக, அவருக்கு நெருக்கமாக இருந்த சில மாநில மற்றும் மாவட்ட நிர்வாகிகள் அதிருப்தி அடைந்து மாற்று அரசியல் வாய்ப்புகளை தேடி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அதன் தொடர்ச்சியாக, தமிழக காங்கிரஸ் முன்னாள் பொதுச்செயலாளர் சுந்தர்ராஜன் தலைமையில் சுமார் 10 ஆயிரம் பேர் வரும் 19-ஆம் தேதி தமிழக வெற்றிக் கழகத்தில் இணைய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த தகவல் அரசியல் வட்டாரங்களில் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது.
இதையும் படிங்க: "NEET" தேர்வு இல்ல... பிசினஸ்..! மத்திய அரசுக்கு பிடிவாதம்..! மாணிக்கம் தாகூர் விளாசல்..!!

மேலும், செல்வப்பெருந்தகை தமிழக காங்கிரஸ் தலைவராக இருந்த காலகட்டத்தில், சிதம்பரம் ஆதரவாளர்களுக்கு கட்சியில் முக்கிய பொறுப்புகள் வழங்கப்படவில்லை என்றும், தேர்தலிலும் போதிய வாய்ப்புகள் கிடைக்கவில்லை என்றும் கூறப்படுகிறது. இதன் காரணமாக சிதம்பரம் அணியில் இருந்த சில முக்கிய நிர்வாகிகள் தற்போது வேறு அணிகளுக்கு மாறியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மாநில நிர்வாகி அருள் பெத்தையா, இளைஞர் காங்கிரஸ் முன்னாள் தலைவர் விஜய இளஞ்செழியன் மற்றும் பிற்படுத்தப்பட்டோர் பிரிவு துணைத் தலைவர் ரவிராஜ் உள்ளிட்டோர் தற்போதைய மாநில தலைவர் மாணிக்கம் தாகூர் அணியில் இணைந்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
இதற்கிடையில், மாநில அல்லது தேசிய அளவில் ப. சிதம்பரத்திற்கு முக்கிய பொறுப்பு வழங்கப்பட்டால் மட்டுமே அவரது அணியில் எஞ்சியுள்ள ஆதரவாளர்களை தக்க வைத்துக்கொள்ள முடியும் என்ற கருத்தும் அவரது ஆதரவாளர்கள் மத்தியில் நிலவுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. எனினும், இந்த தகவல்கள் குறித்து சம்பந்தப்பட்ட தலைவர்கள் இதுவரை அதிகாரப்பூர்வ விளக்கம் அளிக்கவில்லை.
இதையும் படிங்க: என்ன சார் நியாயம்..? துரோகத்தை மூடி மறைக்க இப்படியா..? நயினாரை விளாசிய மாணிக்கம் தாகூர்..!!