தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் வரும் 13ஆம் தேதி (13.09.2025 - சனிக்கிழமை) அன்று திருச்சியில் பிரச்சாரம் மேற்கொள்ள உள்ளார். திருச்சி காந்தி மார்க்கெட் மரக்கடை பகுதியில் விஜய் பரப்புரை மேற்கொள்ள காவல்துறையினர் அனுமதி அளித்துள்ளனர். அதே சமயம் 23 நிபந்தனைகளை போலீசார் விஜய்க்கு விதித்துள்ளனர்.
1. தங்களது மனுவில் 13.09.2025-ம் தேதி அன்று பரப்புரைக்கான நேரம் காலை 10.35 மணி முதல் 11.00 மணி வரை எனக் குறிப்பிட்டுள்ளீர்கள். எனவே பரப்புரைக்கு வரும் கட்சியினர் அனைவரும் காலை 09.35 மணிக்குள் பரப்புரை நடக்கும் இடமான மரக்கடை பகுதிக்கு வருவதை உறுதி செய்ய வேண்டும். ஏனெனில் தாங்கள் பரப்புரை நடத்தும் இடமானது மக்கள் நடமாட்டம் அதிகமுள்ள வணிக பகுதியாகும். அதேபோன்று, பரப்புரை வழித்தடத்தினில் தாங்கள் மனு சமர்ப்பித்திருந்ததின்படி, பரப்புரை முடிவுற்ற பின்பு பரப்புரை வாகனம் (கட்சித்தலைவரது வாகனம்) தர்பார்மேடு, தஞ்சாவூர் ரோடு, பால்பண்ணை வழியாக சென்னை புறவழிச்சாலையை வந்தடைதல் வேண்டும்.
2. பிரச்சாரத்திற்கு வரும் த.வெ.க. தலைவர் சென்னையிலிருந்து சாலை மார்க்கமாக புறப்பட்டு திருச்சி மாநகரம் TVS டோல்கேட்டில் இருந்து பயண வழிப்பாதையாக புறப்பட்டு தலைமை அஞ்சலக ரவுண்டானா, மேலப்புதூர், பாலக்கரை ரவுண்டானா வழியாக சென்று மரக்கடை எம்.ஜி.ஆர். சிலை வந்து சேர்வதாக குறிப்பிட்டுள்ளீர்கள். மேற்படி பயண வழிப்பாதை வழியாக வரும்பொழுது சாலை வலம் (Roadshow) நடத்தக் கூடாது. மேலும் எந்தப்பகுதியிலும் வரவேற்பு நிகழ்ச்சி நடத்தக்கூடாது. இதுசம்மந்தமாக எழுத்துப்பூர்வமான உறுதி அளிக்க வேண்டும்.
இதையும் படிங்க: சனிக்கிழமைகளில் மட்டும் பிரச்சாரம் - விஜய்க்கு அட்வைஸ் கொடுத்த அண்ணாமலை!
3. பரப்புரை வழித்தடத்தினில் தாங்கள் மனு சமர்ப்பித்திருந்ததின்படி, தங்கள் தலைவரின் வாகனத்திற்கு பின்னால் 5 (ஐந்து) வாகனங்களுக்கு மேல் எந்தவொரு வாகனமும் அனுமதிக்கப்படாது. இதைத்தவிர அவர் பயணம் செய்யும் வாகனத்தின் முன்னும் பின்னும் தங்களது கட்சியினர் நடந்தோ, இருசக்கர வாகனங்களிலோ, நான்கு சக்கர வாகனங்களிலோ ஊர்வலமாக வரக்கூடாது. இதுசம்மந்தமாக எழுத்துப்பூர்வமான உறுதி அளிக்க வேண்டும்.
4. பயண வழிப்பாதை மற்றும் பரப்புரை நடக்கும் இடத்தில் பட்டாசுகள் வெடிக்க அனுமதியில்லை. பரப்புரைக்கு பங்கேற்க வருகை தரும் கட்சியனர் எளிதில் தீப்பற்றக்கூடிய பொருட்கள் வைத்திருக்க கூடாது. மேலும் பயண வழிப்பாதையில் இசைக்குழு பயன்படுத்தக்கூடாது.
5. தாங்கள் மனு சமர்ப்பித்திருந்ததின்படி, பரப்புரையின் போது வரக்கூடிய வாகனங்களுக்கு உண்டான பார்க்கிங் வசதிகள் தாங்களே ஏற்பாடு செய்து கொள்ள வேண்டும். பார்க்கிங் வசதிகள் எங்கெங்கு செய்யப்பட்டுள்ளன என்பது குறித்து முன்னரே அறிவிக்கப்பட வேண்டும். பொதுப் போக்குவரத்துக்கு இடையூறாக வாகனங்களை நிறுத்தக்கூடாது. இதுசம்மந்தமாக எழுத்துப்பூர்வமான உறுதி அளிக்க வேண்டும்.
6. கர்ப்பிணிப் பெண்கள், குழந்தைகள், வயது முதிர்ந்தவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் ஆகியோர் வருவதை தவிர்த்திட வேண்டும். பெண்கள் மற்றும் பெரியவர்களுக்கு அவர்கள் கூட்ட நெரிசலில் சிக்கி கொள்ளா வண்ணம் எழுத்துப்பூர்வமான உறுதி அளிக்க வேண்டும்.
7. பரப்புரையில் கலந்து கொள்ளும் எவரும் கையில் கம்பு, குச்சி மற்றும் பிற ஆயுதங்கள் எதையும் வைத்திருத்தல் கூடாது.
8. பொதுமக்களுக்கும், சட்டம் ஒழுங்கிற்கும், போக்குவரத்திற்கும் இடையூறு ஏற்படாத வகையில் நிகழ்ச்சிகள் நடத்தப்பட வேண்டும்.
9. நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் நிகழ்ச்சியில் கலந்து கொள்பவர்களுக்கு தேவையான மருத்துவ வசதி, குடிநீர் வசதி மற்றும் முதல் உதவி சாதனங்கள் / ஆம்புலன்ஸ் / தீயணைப்பு சாதனங்கள் தயார் நிலையில் வைத்துக்கொள்ள வேண்டும். இதுசம்மந்தமாக எழுத்துப்பூர்வமான உறுதி அளிக்க வேண்டும்.
10. போக்குவரத்தை சரிசெய்யும் பொருட்டும், பரப்புரை நடைபெறும் மரக்கடை பகுதியில் கட்சியினரை ஒழுங்குபடுத்துவதற்கும், காவல்துறையினருக்கு உதவியாக போதுமான தன்னார்வலர்கள் (Volunteers) ஏற்பாடு செய்ய வேண்டும்.
11. தாங்கள் மனு சமர்ப்பித்திருந்ததின்படி, பரப்புரையின் போது தாங்கள் மற்றும் தங்கள் அமைப்பினர் பிறர்மனம் புண்படும் வகையிலோ, பிற ஜாதி மதத்தினரை புண்படுத்தும் வகையிலோ நடந்துகொள்ளக்கூடாது.
12. காவல்துறையினர் அனுமதிக்கும் வழித்தடத்தில் மட்டுமே பரப்புரைக்கு வருபவர்கள் வரவேண்டும். இதற்கு நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் பொறுப்பு ஏற்க வேண்டும்.
13. பரப்புரைக்கு பெட்டி வடிவ ஒலிபெருக்கியை மட்டுமே பயன்படுத்த வேண்டும். கூம்பு வடிவ குழாயை கட்டாயம் பயன்படுத்த கூடாது, ஒலி அளவானது பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தாத அளவிற்குள் இருக்க வேண்டும்.
14. பரப்புரைக்கு மாவட்டம் வாரியாக யாருடைய தலைமையில், எத்தனை வாகனங்களில், எவ்வளவு தொண்டர்கள் வருவார்கள் என்ற எண்ணிக்கை விபரமும், தலைமை தாங்கி அழைத்து வரும் பிரதிநிதிகளின் தொடர்பு எண் உள்ளிட்ட விபரங்களும் முன்னதாகவே அளிக்கப்பட வேண்டும். இதுசம்மந்தமாக எழுத்துப்பூர்வமான உறுதி அளிக்க வேண்டும்.
15. தாங்கள் மனு சமர்ப்பித்திருந்ததின்படி, பரப்புரையின் போது எந்தப் பொது சொத்துக்கோ, தனியார் சொத்துக்கோ, சேதம் ஏற்படுத்தக்கூடாது. அவ்வாறு சேதம் ஏற்படுத்தினால் குற்றம் செய்கை நடைபெறும் பட்சத்தில் சூழ்நிலைக்கேற்ப நடவடிக்கை எடுக்கப்பட்டு, சட்டம் ஒழுங்கு நிலை நிறுத்தப்படும். நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் இதற்கு முழுப்பொறுப்பு ஏற்க வேண்டும். இதுசம்மந்தமாக எழுத்துப்பூர்வமான உறுதி அளிக்க வேண்டும
16. பரப்புரை நடைபெறும் மரக்கடை பகுதியில் உள்ள அரசு மற்றும் தனியார் கட்டிடங்கள், காம்பவுண்ட் சுவர்கள், மரங்கள், மின் விளக்கு கம்பங்கள் (EB Lamp posts), மின் கம்பங்கள் (EB posts), மின் மாற்றிகள் (EB Transformers), வாகனங்கள்(பஸ், வேன், ஆட்டோ மற்றும் இருசக்கர வாகனங்கள்), கொடிக்கம்பங்கள், சிலையை சுற்றி அமைக்கப்பட்டுள்ள பாதுகாப்பு கிரில் கம்பிகள் ஆகியவற்றின் மீது ஏறிக்கொண்டு பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தக் கூடாது. இதனை நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் உறுதிபடுத்த வேண்டும்.
17. தாங்கள் மனு சமர்ப்பித்திருந்ததின்படி, பரப்புரை முடிந்த உடன் அதில் கலந்து கொண்டவர்கள் அமைதியான முறையில் கலைந்து செல்லவேண்டும்.
18. மாண்பமை உயர்நீதிமன்ற உத்தரவுப்படி தேசிய நெடுஞ்சாலையிலும், மற்ற சாலைகளிலும், நெடுஞ்சாலை / இதர சாலைகளின் இருபுறங்களிலும் ப்ளக்ஸ் பேனரோ, அலங்கார வளைவுகளோ, கொடி கட்டப்பட்ட கம்பிகளோ உரிய அனுமதி பெறாமல் வைக்க அனுமதியில்லை. இதுசம்மந்தமாக எழுத்துப்பூர்வமான உறுதி அளிக்க வேண்டும்.
19. மேலும் திருச்சி மாநகர காவல் எல்கைக்குள் தமிழ்நாடு காவல் சட்டம் பிரிவு 30 (2) என் விதிமுறைகள் அமலில் உள்ளதால் காவல் துறை விதிகளுக்கு உட்பட்டே நடந்து கொள்ள வேண்டும். இதுசம்மந்தமாக எழுத்துப்பூர்வமான உறுதி அளிக்க வேண்டும்.
20. பிரச்சாரத்திற்கு வரும் த.வெ.க. தலைவர் செல்லும் பயண வழிப்பாதையான டிவிஎஸ் டோல்கேட், தலைமை அஞ்சலக ரவுண்டானா, பாலக்கரை ரவுண்டானா ஆகிய இடங்களை சுற்றிலும் மருத்துவமனைகள், முக்கிய கல்லூரிகள், பள்ளிகள், சர்வதேச விமான நிலையம், இரயில் நிலையம் மற்றும் மத்திய பேருந்து நிலையம் அமைந்துள்ள பகுதிகளாகும். இப்பகுதிகளில் ஆம்புலன்ஸ் வாகனங்களுக்கும், பொதுமக்களுக்கும், வாகன ஒட்டிகளுக்கும், பள்ளி மாணாக்கர்களுக்கும், பெர்கள், குழந்தைகள், முதியவர்கள் மற்றும் நோயாளிகளுக்கும் எவ்வித போக்குவரத்து இடையூறும் ஏற்படா வண்ணம் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் பார்த்துக் கொள்ள வேண்டும். இதுசம்மந்தமாக எழுத்துப்பூர்வமான உறுதி அளிக்க வேண்டும்.
21. பரப்புரை நடைபெறும் இடமான மரக்கடை பகுதியிலும், பிரச்சாரத்திற்கு வரும் த.வெ.க. தலைவரின் பயண வழிப்பாதையிலும் பொதுப்போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படா வண்ணம் நடந்து கொள்ள வேண்டும். மேலும் ஆம்புலன்ஸ் வாகனங்கள் சென்று வர எவ்வித தடங்கலும் ஏற்படுத்த கூடாது
21. பரப்புரை நடைபெறும் இடமான மரக்கடை பகுதியிலும், பிரச்சாரத்திற்கு வரும் த.வெ.க. தலைவரின் பயண வழிப்பாதையிலும் பொதுப்போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படா வண்ணம் நடந்து கொள்ள வேண்டும். மேலும் ஆம்புலன்ஸ் வாகனங்கள் சென்று வர எவ்வித தடங்கலும் இல்லாதவாறு நடந்து கொள்ள வேண்டும். இதனை நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் உறுதிப்படுத்த வேண்டும்.
22. மேலே கூறப்பட்டுள்ள அனைத்து விதிமுறைகள் மற்றும் காவல் அதிகாரிகளால் அவ்வப்போது வழங்கப்படும் அறிவுரைகளையும் பின்பற்றி நடப்பதை நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் உறுதி செய்ய வேண்டும்.
23. மேற்கண்ட நிபந்தனைகளில் எவையேனும் மீறப்படும் பட்சத்தில் பரப்புரையை இடையிலேயே நிறுந்துவதற்கு காவல்துறையினருக்கு முழு அதிகாரம் உள்ளது. மேலும் அதற்காக சட்டப்படியான நடவடிக்கையும் தெரிவித்துக்கொள்ளப்படுகிறது.
இதையும் படிங்க: திமுக, அதிமுகவுக்கு இடையில நீ யாரு.... வார்த்தையை விட்ட விஜயை வச்சி செய்த எடப்பாடி பழனிசாமி...!