தமிழக மீன்வளத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் மற்றும் அவரது குடும்பத்தினர் மீதான வருமானத்திற்கு அதிகமான சொத்துக் குவிப்பு வழக்கின் விசாரணையை, வரும் ஜனவரி 21-ஆம் தேதிக்கு ஒத்திவைத்துத் தூத்துக்குடி மாவட்ட நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது.
அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன், அவரது மனைவி, மகன்கள் மற்றும் சகோதரர்கள் என மொத்தம் ஏழு பேருக்கு எதிராகத் தொடரப்பட்ட இந்தச் சொத்துக் குவிப்பு வழக்கு தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. ஏற்கனவே அரசு தரப்பு சாட்சிகள் அனைவரிடமும் விசாரணை நிறைவடைந்துள்ள நிலையில், தற்போது பிரதிவாதிகள் தரப்பு சாட்சிகளிடம் விசாரணை நடைபெற்று வருகிறது. இந்நிலையில், இன்று தூத்துக்குடி மாவட்ட நீதிமன்றத்தில் நீதிபதி வசந்தி முன்னிலையில் இவ்வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தது.
இன்றைய விசாரணையின் போது, அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன், அவரது மனைவி மற்றும் மகன் அனந்த ராமகிருஷ்ணன் ஆகியோர் நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை. அதேபோல் அமைச்சரின் தம்பிகளான சண்முகநாதன் மற்றும் சிவானந்தன் ஆகியோரும் இன்று நீதிமன்றத்திற்கு வரவில்லை. அமைச்சரின் மூன்று மகன்களில் அனந்த பத்மநாபன் மற்றும் அனந்த மகேஸ்வரன் ஆகிய இருவர் மட்டுமே இன்று நேரில் ஆஜராகினர். இதனைத் தொடர்ந்து, வழக்கின் முக்கியத்துவத்தைக் கருத்தில் கொண்டு, அடுத்தகட்ட விசாரணையை வரும் ஜனவரி 21-ஆம் தேதிக்கு ஒத்திவைப்பதாக நீதிபதி அறிவித்தார்.
இதையும் படிங்க: "நோ ஒர்க் - நோ பே!" போராடும் ஆசிரியர்களுக்குத் தமிழக அரசு கடும் எச்சரிக்கை!
இந்த வழக்கில் கடந்த சில மாதங்களாகவே சாட்சிகள் விசாரணை விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், விரைவில் இறுதித் தீர்ப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. அமைச்சரின் குடும்பத்தினர் மீதான இந்த வழக்கு அரசியல் வட்டாரத்தில் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ள நிலையில், அடுத்த விசாரணையின் போது அமைச்சர் மற்றும் இதர குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் நேரில் ஆஜராக வேண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க: VERY SORRY… மத உணர்வை தூண்டி குளிர் காய முடியாது… முதல்வர் ஸ்டாலின் திட்டவட்டம்..!