சென்னை மக்களிடையே சற்று அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள ஒரு சம்பவம் கிண்டி சிறுவர் பூங்காவில் நிகழ்ந்துள்ளது. கடந்த சில நாட்களாக இங்கு 20-க்கும் மேற்பட்ட பறவைகள் திடீரென உயிரிழந்தன. இதில் கரண்டிவாயன், கூழைக்கடா, செங்கால் நாரை, கொக்குகள் உள்ளிட்ட பல்வேறு இனங்களைச் சேர்ந்த பறவைகள் அடங்கும்.

இறந்த பறவைகளைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் அடுத்தடுத்து இதேபோன்ற உயிரிழப்புகள் பதிவாகின. இதையடுத்து, வனத்துறை மற்றும் சுகாதாரத் துறை அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுத்தனர். இறந்த பறவைகளின் மாதிரிகள் பரிசோதனைக்காக பூபால் நகரில் உள்ள தேசிய உயர் பாதுகாப்பு விலங்கு நோயியல் நிறுவனத்திற்கு (NIHSAD) அனுப்பி வைக்கப்பட்டன. பரிசோதனை முடிவுகள் வெளியானதில், அவை H5N1 வகை பறவை காய்ச்சல் (Avian Influenza) தொற்றால் உயிரிழந்தது உறுதியானது.
இதையும் படிங்க: பறவைக்காய்ச்சல் எதிரொலி! சென்னையில் செத்து மடியும் காகங்கள்! தமிழக பொது சுகாதாரத்துறை சொல்வது என்ன?
இதனால், தொற்று மேலும் பரவாமல் தடுக்கும் வகையில், கிண்டி சிறுவர் பூங்கா மார்ச் 20, 2026 முதல் பொதுமக்களுக்காக தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது. மறு அறிவிப்பு வரும் வரை பூங்கா மூடப்பட்ட நிலையில் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு சுகாதாரத் துறை முக்கிய அறிவுறுத்தல்களை வெளியிட்டுள்ளது.
பறவை காய்ச்சல் தொற்று பறவைகளிடமிருந்து மனிதர்களுக்கு இதுவரை பரவியதாக எந்தத் தகவலும் இல்லை என்பதால், பொதுமக்கள் அளவுக்கதிகமான அச்சம் கொள்ளத் தேவையில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், தொற்று பரவாமல் தடுக்க சில முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை கடைப்பிடிக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.
முக்கிய அறிவுறுத்தல்கள்:
- இருமல், சளி, காய்ச்சல் போன்ற அறிகுறிகள் தென்பட்டால் சுயமாக மருந்து உட்கொள்ளாமல், உடனடியாக அருகிலுள்ள அரசு மருத்துவமனை அல்லது மருத்துவரை அணுக வேண்டும்.
- கைகளை அடிக்கடி சோப்பு போட்டு நன்கு கழுவுதல், தனிப்பட்ட சுகாதாரத்தை பேணுதல் மற்றும் சுற்றுப்புறத்தை சுத்தமாக வைத்திருத்தல் அவசியம்.
- முட்டை, கோழி இறைச்சி உள்ளிட்டவற்றை முழுமையாகவும் சரிவரவும் சமைத்த பின்னரே உட்கொள்ள வேண்டும். பாதி வேகாத அல்லது சமைக்கப்படாத உணவுகளைத் தவிர்க்க வேண்டும்.
- பறவை காய்ச்சல் தொடர்பான வதந்திகள் மற்றும் தவறான தகவல்களை நம்பாமல், அதிகாரப்பூர்வ ஆதாரங்களை மட்டுமே நம்ப வேண்டும்.
- மேலும் தகவல்களுக்கு அல்லது சந்தேகம் ஏற்பட்டால், சுகாதாரத் துறையின் கட்டணமில்லா தொலைபேசி எண் 104-ஐ தொடர்பு கொள்ளலாம்.

இந்த நடவடிக்கைகள் மூலம் பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்க முடியும் என சுகாதாரத் துறை நம்பிக்கை தெரிவித்துள்ளது. பூங்காவில் உள்ள மற்ற பறவைகள் மற்றும் விலங்குகளை பாதுகாக்கும் பணிகளும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
இதையும் படிங்க: திமுக ஒரு தீயசக்தி..!! கோஷமிட்டு வாக்கு சேகரித்த சிறுவர்கள்..! TVK மா.செ பாய்ந்த வழக்கு..!!