தமிழக சட்டமன்றத் தேர்தல் ஏப்ரல் 23, 2026 அன்று ஒரே கட்டமாக நடைபெற உள்ளது. தேர்தல் நெருங்கி வரும் நிலையில், அரசியல் கட்சித் தலைவர்கள் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளதால், விதிமீறல்கள் ஏதும் நடைபெறாமல் தடுக்க தேர்தல் ஆணையத்தின் பறக்கும் படை அதிகாரிகள் மாநிலம் முழுவதும் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.
தேர்தல் விதிகளின்படி, ரூ.50,000க்கு மேல் பணத்தை உரிய ஆவணங்கள் இன்றி எடுத்துச் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. இதேபோல், ரூ.10,000க்கு மேல் மதிப்புள்ள பரிசுப் பொருட்களையும் ஆதாரமின்றி கொண்டு செல்ல முடியாது. இந்த விதிமீறல்களைத் தடுக்க, பறக்கும் படை அதிகாரிகள் சாலைகளில் வாகனங்களை மறித்து சோதனை செய்து வருகின்றனர். அரசியல் தலைவர்களின் வாகனங்கள் முதற்கொண்டு அனைத்தும் சோதனையிடப்பட்டு வருகிறது. விதிகளை மீறி வாகனங்களில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்படும் பணம் பறிமுதல் செய்யப்பட்டு வருகிறது.
அந்த வகையில், தர்மபுரி மாவட்டம் அரூர் அம்பேத்கர் நகர் அருகே இருக்கக்கூடிய பெட்ரோல் பங்க் முன்பு சுமார் 20க்கும் மேற்பட்ட அடையாளம் தெரியாத நபர்கள் நின்று கொண்டிருந்ததாகவும், அப்போது அவ்வழியாக சென்ற தேர்தல் பறக்கும் படையினரை பார்த்ததும் அவர்கள் ஓட்டம் பிடித்ததாக கூறப்படுகிறது.
இதையும் படிங்க: மக்களுடன் கைகுலுக்கி வாக்கு கேட்ட முதல்வர்! அவினாசி தேர்தல் களத்தில் மு.க.ஸ்டாலின் அதிரடி!
பின்பு அங்கே கேட்பாராற்று இருந்த இருசக்கர வாகனத்தை, சந்தேகம் அடைந்த தேர்தல் பறக்கும் படை குழுவினர் சோதனை செய்ததில் ஸ்கூட்டி டிக்கியில் கட்டுக்கட்டாக பணம் இருந்ததாகவும், அதில் 22 லட்சத்து 3 ஆயிரம் ரூபாயை கைப்பற்றிய தேர்தல் பறக்கும் படை குழுவினர் அரூர் வருவாய் கோட்டாட்சியர் மற்றும் தேர்தல் நடத்தும் அலுவலருமான செம்மலையிடம் ஒப்படைத்தனர்.
மேலும் கேட்பாரற்று கிடந்த இருசக்கர வாகனத்தையும் பறிமுதல் செய்து ஆர்டிஓ அலுவலகத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து தேர்தல் பறக்கும் படையினர் சந்தேகத்திற்கு இடமான பகுதியில் பணம் ஏதேனும் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதா என, இருள் சூழ்ந்த விவசாய தோட்டங்களிலும் தேடுதல் பணியில் ஈடுபட்டனர். பின்பு அருகே இருந்த நபர்களிடம் விசாரணை மேற்கொண்டு பணம் ஏதும் கிடைக்காததால் திரும்பிச் சென்றனர்.
இதையும் படிங்க: தமிழ்நாடு இந்தியாவின் வழிகாட்டி! கோவையில் தேஜஸ்வி யாதவ் புகழாரம்!