சென்னை மெரினா கடற்கரையில் முன்னாள் முதல்வர் கருணாநிதி நினைவாக பேனா சின்னம் அமைக்கும் திட்டம் குறித்து தென் மண்டல பசுமைத் தீர்ப்பாயம் முக்கிய கேள்வி எழுப்பியுள்ளது. இந்தத் திட்டத்தை தமிழக அரசு தொடரப் போகிறதா அல்லது கைவிடப் போகிறதா என்பதை வரும் ஜூலை 28-ம் தேதிக்குள் தெரிவிக்க வேண்டும் என தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது.
கருணாநிதியின் தமிழ் இலக்கியப் பங்களிப்பை நினைவூட்டும் வகையில் 80 கோடி ரூபாய் செலவில் 8,000 சதுர மீட்டர் பரப்பளவில், 30 மீட்டர் உயரமுள்ள பேனா நினைவுச் சின்னம் அமைக்க திட்டமிடப்பட்டது. இதற்காக மெரினா கடற்கரையில் 290 மீட்டர் தரைப்பகுதியிலும், கடலுக்குள் 360 மீட்டர் நீளத்திலும் பாலம் அமைக்கும் பணியும் அறிவிக்கப்பட்டிருந்தது. கடந்த ஆட்சியில் இந்தத் திட்டத்துக்கு அனுமதி வழங்கப்பட்டது.
ஆனால், ஆமைகள் முட்டையிடும் கடற்கரை ஒழுங்குமுறை மண்டலத்துக்குள் இந்தத் திட்டம் வருவதால் எதிர்ப்பு எழுந்தது. வழக்கறிஞர் ராம்குமார் ஆதித்தன் மற்றும் நாம் தமிழர் கட்சியின் வெண்ணிலா தாயுமானவன் ஆகியோர் தென் மண்டல பசுமைத் தீர்ப்பாயத்தில் வழக்கு தொடர்ந்தனர்.
இதையும் படிங்க: 6 வயது சிறுமியிடம் பாலியல் அத்துமீறல்! சென்னை மெரினாவில் பயங்கரம்! குதிரை ஓட்டியை தட்டி தூக்கிய போலீஸ்!

நேற்று இந்த வழக்கை விசாரித்த நீதிபதி புஷ்பா சத்யநாராயணா மற்றும் நிபுணர் குழு உறுப்பினர் பிரசாந்த் கர்கவா ஆகியோர், “மூன்று ஆண்டுகளாகியும் எந்தக் கட்டுமானப் பணியும் தொடங்கப்படவில்லை. அரசு இந்தத் திட்டத்தை முன்னெடுக்கப் போகிறதா அல்லது கைவிடப் போகிறதா என தெளிவாகத் தெரிவிக்க வேண்டும்” என உத்தரவிட்டனர்.
தீர்ப்பாயம் நினைவுச் சின்னங்கள் அமைப்பதை எதிர்க்கவில்லை என்றும், ஆனால் கடலுக்குள் கட்டுமானம் செய்வதால் கடல்வாழ் உயிரினங்கள், மீனவர்கள் மற்றும் பொதுமக்களின் பாதுகாப்பு பாதிக்கப்படலாம் என்பதை கருத்தில் கொள்ள வேண்டும் என வலியுறுத்தியது. திட்டத்தை கைவிட்டால் வழக்கை முடித்து வைக்கலாம் எனவும் தெரிவித்தது.
இந்தத் திட்டம் அறிவிக்கப்பட்டு நீண்ட காலம் ஆகியும் எந்த முன்னேற்றமும் இல்லாதது பலரிடையே விமர்சனத்தை ஏற்படுத்தியுள்ளது. தமிழக அரசு இந்த விவகாரத்தில் விரைவில் தெளிவான முடிவை அறிவிக்க வேண்டும் என எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
கருணாநிதியின் நினைவைப் போற்றும் வகையில் நினைவுச் சின்னம் அமைக்க வேண்டும் என்பதில் பலரும் உடன்பாடு தெரிவிக்கும் நிலையில், சுற்றுச்சூழல் பாதுகாப்பும் முக்கியம் என்பதால் அரசு சமநிலையான முடிவை எடுக்க வேண்டும் என அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. வரும் ஜூலை 28-ம் தேதிக்குள் அரசு அளிக்கும் பதில் இந்த வழக்கின் திசையை தீர்மானிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க: முன்னாள் முதல்வர் கருணாநிதி புகழ்பாடும் தமிழ் பாட புத்தகங்கள்! மாற்றம் கொண்டு வருமா விஜயின் தவெக அரசு?!