தமிழக அரசின் புதிய அமைச்சரவையைச் சுற்றி புதிய சர்ச்சை கிளம்பியுள்ளது. அமைச்சர்களின் அரசியல் உதவியாளர்கள் மற்றும் சில அதிகாரிகள் இணைந்து பல்வேறு துறைகளில் முறைகேடான வசூல் நடவடிக்கைகளில் ஈடுபடுவதாக தலைமைச் செயலக வட்டாரங்களில் தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த குற்றச்சாட்டுகள் அரசியல் வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.
தமிழக வெற்றிக் கழக அரசு பொறுப்பேற்ற பிறகு, 34 அமைச்சர்கள் பதவியேற்றனர். கூட்டணி கட்சிகளான காங்கிரசுக்கு இரண்டு அமைச்சரவை இடங்களும், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி மற்றும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கிற்கு தலா ஒரு அமைச்சர் பதவியும் வழங்கப்பட்டது. ஆட்சிப் பொறுப்பேற்ற நாளிலிருந்தே வெளிப்படையான, ஊழலற்ற மற்றும் லஞ்சமற்ற நிர்வாகத்தை வழங்குவோம் என்று முதல்வர் விஜய் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார். அமைச்சரவை கூட்டங்கள் மற்றும் பொதுமக்கள் சந்திப்புகளிலும் இதே உறுதியை அவர் மீண்டும் மீண்டும் தெரிவித்து வருவதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில், அமைச்சர்களின் அரசியல் உதவியாளர்கள் சிலர், மாவட்ட அதிகாரிகளுடன் இணைந்து பல்வேறு பணிகளில் பண வசூல் நடைபெறுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தலைமைச் செயலக வட்டாரங்களில் பேசப்படும் தகவலின்படி, சில அமைச்சர்களிடம் "ஆட்சி எப்போது மாறும் என்று சொல்ல முடியாது. அதற்குள் அரசியல் ரீதியாகவும், நிதி ரீதியாகவும் தயாராக இருக்க வேண்டும்" என்று கூறி அழுத்தம் கொடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
இதையும் படிங்க: தலைமை செயலகமாக மாறும் கோயம்பேடு பஸ் ஸ்டாண்ட்!! ரூ.350 கோடியில் பிரமாண்ட திட்டம்!

மேலும், விரைவில் நடைபெறவுள்ள இடைத்தேர்தல்களை முன்னிட்டு, தேர்தல் செலவுகளுக்கான நிதியை ஏற்பாடு செய்ய வேண்டிய அவசியம் இருப்பதாகவும், அதற்காக பல்வேறு வழிகளில் நிதி திரட்ட வேண்டும் என்றும் சில உதவியாளர்கள் அமைச்சர்களிடம் வலியுறுத்தியதாக கூறப்படுகிறது. இந்த விவகாரம் முதல்வரின் கவனத்திற்கு சென்றால் சிக்கல் ஏற்படும் என்ற அச்சமும் சில அமைச்சர்கள் மத்தியில் இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதன் தொடர்ச்சியாக, பணியிட மாற்றங்கள், பதவி உயர்வுகள், அரசு ஒப்பந்தங்கள் உள்ளிட்ட பல்வேறு நிர்வாக நடவடிக்கைகளில் முறைகேடான வசூல் நடைபெறுவதாகவும், சில துறைகளில் மதிப்பீட்டு தொகையை குறிப்பிடாமல் ஒப்பந்தங்கள் கோரப்பட்டிருப்பதாகவும் கூறப்படுகிறது. இருப்பினும், இந்த குற்றச்சாட்டுகள் குறித்து தமிழக அரசு அல்லது சம்பந்தப்பட்ட அமைச்சர்கள் தரப்பில் இதுவரை எந்த அதிகாரப்பூர்வ விளக்கமும் வெளியாகவில்லை. தலைமைச் செயலக வட்டாரங்களில் வெளியாகியுள்ள இந்த தகவல்கள் அரசியல் ரீதியாக புதிய விவாதத்தை ஏற்படுத்தியுள்ளன. குற்றச்சாட்டுகள் உண்மையா அல்லது வெறும் அரசியல் பரபரப்பா என்பது குறித்து அதிகாரப்பூர்வ தகவல்கள் வெளியாகும் வரை காத்திருக்க வேண்டிய சூழல் நிலவுகிறது.
இதையும் படிங்க: எங்களுக்கே விவசாயத்துக்கு தண்ணீர் இல்லை! அணை நிரம்புறப்போ திறந்து விடுறோம்! கர்நாடகா மீண்டும் மறுப்பு!