மத்திய அரசின் தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் கீழ் 1 லட்சத்து 44 ஆயிரத்து 634 கிலோ மீட்டர் நீளமுள்ள தேசிய நெடுஞ்சாலைகள் பராமரிக்கப்பட்டு வருகிறது. இதில் உள்ள 892 சுங்கச்சாவடிகளில் 675 சுங்கச்சாவடிகள் பொது நிதியளிப்பு பிரிவிலும், 180 சுங்கச்சாவடிகள் அரசின் சலுகை பெற்றவையாகவும், செயல்படுகின்றன.

இந்நிலையில் தமிழ்நாட்டில் உள்ள 38 சுங்கச்சாவடிகளில் (செப்டம்பர் 1) இன்று முதல் கட்டண உயர்வு அமலுக்கு வந்துள்ளது. தேசிய நெடுஞ்சாலை ஆணையம் (NHAI) வெளியிட்ட அறிவிப்பின்படி, இந்த உயர்வு 5 முதல் 10 சதவீதம் வரை இருக்கும், வாகன வகைகளைப் பொறுத்து கட்டணம் ஒரு பயணத்திற்கு ரூ.5 முதல் ரூ.150 வரை அதிகரிக்கும். இந்த உயர்வு சென்னை-பெங்களூரு, சென்னை-திருச்சி, மதுரை-தூத்துக்குடி, சேலம்-உளுந்தூர்பேட்டை உள்ளிட்ட முக்கிய நெடுஞ்சாலைகளில் உள்ள சுங்கச்சாவடிகளை உள்ளடக்கியது.
இதையும் படிங்க: டீ, காபி பிரியர்களே கவனிங்க… இனிமே விலை இது தானாம்! வியாபாரிகள் சங்கம் அறிவிப்பு
விழுப்புரம், திருச்சி, மதுரை, நெல்லை, தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்கள் குறிப்பாக விக்கிரவாண்டி, சமயபுரம், ஓமலூர் உள்ளிட்ட 38 சுங்கச்சாவடிகளில் சுங்கக் கட்டணம் நள்ளிரவு முதல் 5 முதல் 7 சதவீதம் வரை உயர்த்தப்பட்டு அமலுக்கு வந்தது. இந்த கட்டண உயர்வால் வாகன ஓட்டிகள் அதிருப்தி அடைந்துள்ளனர்.
இந்தக் கட்டண உயர்வு, அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்வுக்கு வழிவகுக்கும் என வியாபாரிகள் மற்றும் போக்குவரத்து அமைப்புகள் கவலை தெரிவித்துள்ளன. தமிழ்நாடு வணிகர் சங்கத் தலைவர் ஏ.எம்.விக்ரம ராஜா, “கட்டண உயர்வு பொருட்களின் விலையை 10 முதல் 15 சதவீதம் வரை உயர்த்தும். இது பொதுமக்களுக்கு சுமையாக அமையும்,” எனக் கூறினார். மேலும், சாலைகளின் பராமரிப்பு மற்றும் விரிவாக்கப் பணிகள் முறையாக நடைபெறவில்லை என பயனர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.
தமிழ்நாட்டில் மொத்தம் 78 சுங்கச்சாவடிகள் உள்ளன, இதில் 38 சாவடிகளில் (செப்டம்பர் 1) முதல் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது, மீதமுள்ளவை ஏப்ரல் 1-ல் உயர்த்தப்படும். 2023-24ஆம் ஆண்டில், தமிழ்நாட்டில் சுங்கக் கட்டணமாக ரூ.4,221 கோடி வசூலிக்கப்பட்டது, இது நாட்டிலேயே ஐந்தாவது இடத்தில் உள்ளது. கிருஷ்ணகிரி தோப்பூர் சுங்கச்சாவடி மட்டும் ரூ.269 கோடி வசூலித்து முதலிடத்தில் உள்ளது.

போக்குவரத்து ஆர்வலர்கள், சாலைப் பராமரிப்பு மற்றும் மழைக்காலத்தில் புழுதி பறக்கும் பிரச்னைகளைச் சுட்டிக்காட்டி, இந்த உயர்வு “தேவையற்ற சுமை” என விமர்சித்துள்ளனர். மேலும், 60 கி.மீ. தொலைவுக்குள் சுங்கச்சாவடிகள் அமைக்கப்படுவது விதிமீறல் எனவும், இதை நீக்க வேண்டும் எனவும் கோரிக்கைகள் எழுந்துள்ளன.
இதையும் படிங்க: ஆக்ஸ்போர்ட் பல்கலை.யில் பெரியார் உருவப்படம்! MP என்.ஆர் இளங்கோ இல்ல திருமண விழாவில் பங்கேற்ற முதல்வர் அறிவிப்பு..!