சென்னை அசோக் நகரில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது, தமிழகத்தை சனாதனமயமாக பாஜக முயன்று வருகிறது என்றும் தமிழகத்தில் உள்ள சில கட்சிகள் பாஜகவிற்கு உறுதுணையாக செயல்படுவதாகவும் குற்றம் சாட்டினார்.
பாஜக தமிழக கட்சிகளுடன் இணைந்து நாடமாட தொடங்கிய பின் ஆணவ கொலைகள் அதிகரித்தன என்று தெரிவித்தார். கவின் ஆணவ கொலை தொடர்பாக உயர் நீதிமன்ற கண்காணிப்பில் விசாரணை நடத்த வேண்டும் என திருமாவளவன் வலியுறுத்தினார். மேலும், ஆணவக் கொலைகளை தடுக்க மத்திய அரசு சட்டம் இயற்ற வேண்டும் என வலியுறுத்தி உள்ளார்.
நெல்லை ஆணவ படுகொலையை கண்டித்து பாஜக, ஆர்எஸ்எஸ் பேசவில்லை என்றும் ஆணவ படுகொலைகளை ஊக்குவிப்பவர்களாக சங்பரிவார் அமைப்புகள் உள்ளன என்று குற்றம் சாட்டினார்.
இதையும் படிங்க: சாதி விட்டு சாதி திருமணம்... சனாதானத்தின் சதி... கொந்தளித்த திருமா...!
தமிழக அரசு சாதி ஆணவ படுகொலைக்கு எதிரான சட்டத்தை இயற்ற வேண்டும் என வலியுறுத்திய திருமாவளவன், வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தம் கண்டனத்திற்கு உள்ளாகி வருகிறது என்று கூறினார்.

வாக்காளர் பட்டியல் சிறப்புத் திருத்தம் பற்றி விவாதம் நடத்தக்கூட மத்திய அரசு தயாராக இல்லை என்று குற்றம் சாட்டினார். 2003 க்கு பிறகு பதிவு செய்தவர்கள் குடியுரிமை ஆவணங்களை சமர்ப்பிக்க சொல்கிறது தேர்தல் ஆணையம் என கூறிய திருமா, பீகாரில் 65 லட்சம் பேரை வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கி இருப்பது அதிர்ச்சி அளிக்கிறது என தெரிவித்தார்.
வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டவர்கள் சிறுபான்மையினர், பட்டியல் சமூகத்தினர் என்றும் வடமாநிலங்களைச் சேர்ந்த சுமார் 80 லட்சம் பேர் தமிழகத்தில் குடியேறியுள்ளனர் என்றும் கூறினார்.
மேலும், வட மாநிலத்தவர்களை தமிழக வாக்காளர் பட்டியலில் சேர்க்க முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது என தெரிவித்த அவர், தமிழகத்தில் அனைத்து கட்சி கூட்டத்தை முதலமைச்சர் கூட்ட வேண்டும் என கேட்டுகொண்டார்.
இதையும் படிங்க: ஓயாத சாதி வெறியாட்டம்! அடக்கப்படாத ஆணவ படுகொலைகள்... கொதித்துப் போன திருமா..!